2024 ஆம் ஆண்டு ஜனவரி 10 மற்றும் 11-ந் தேதியில் தமிழகத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெறும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 


முதல் சட்டப்பேரவை கூட்டம் 


கடந்த ஜனவரி 9 ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய 2023 ஆம் ஆண்டுக்கான சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. ஜனவரி 10 ஆம் தேதி மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலில் செலுத்திய பின் அவை ஒத்திவைக்கப்பட்டது. அடுத்தடுத்த நாட்களில் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு அமைச்சர்கள் துறை ரீதியாக பதிலளித்தனர். அதேசமயம் சேது சமுத்திர திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. 


கடைசி நாளான இன்றும் காலையில் உறுப்பினர்களின் கேள்விக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளித்தனர். பின்னர் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அளித்த பதிலுரை அளித்தார். அப்போது பேசிய அவர், 2024 ஆம் ஆண்டு ஜனவரி 10, 11 ஆம் தேதி உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழக அரசு சார்பில் நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.  


வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் 


கடந்தாண்டு ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் தமிழக அரசு தொழில் துறையின் மீது மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள் முதலீட்டாளர்களுக்கும், புதிய தொழில் தொடங்குவோருக்கும் மிகப்பெரிய நம்பிக்கையை அரசின் மீது அளித்துள்ளதாக தெரிவித்தார். 


2021 ஏப்ரல் தொடங்கி டிசம்பர் வரை மட்டும் தமிழ்நாட்டில்  தமிழ்நாட்டில் வெளிநாட்டு நேரடி முதலீடு என்பது 41.5 விழுக்காடு அதிகரித்துள்ளது என கூறியிருந்தார். மேலும் பல்வேறு நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகளில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கு தேவையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டதாக மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார். 


அப்போது 2023 ஆம் ஆண்டின் இறுதியில் தமிழ்நாட்டில் அரசு சார்பில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்படும் என்றும், இதன்மூலம் அதிகமான முதலீடுகள் திரட்டப்பட்டு, பல லட்சம் இளைஞர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என தெரிவித்திருந்தார்.