தமிழ்நாட்டில் ரமலான் பண்டிகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் அரசியல் கட்சி தலைவர்கள் இஸ்லாமிய மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். 


ரம்ஜான்:


இஸ்லாமிய மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான ரமலான் பண்டிகை  கொண்டாடப்படுகிறது. இஸ்லாமிய நாட்காட்டியின் படி ஒன்பதாவது மாதமாக வரும் ரமலான் மாதத்தில் இஸ்லாமியர்கள் 29 அல்லது 30 நாட்கள் நோன்பு இருப்பார்கள். இந்த ஒரு மாதத்தில் சூரிய உதயம் முதல் அஸ்தமனம் வரை உணவு, தண்ணீர் எடுத்துக் கொள்ளாமல் நோன்பிருந்து இறை வழிபாட்டில் மட்டுமே கவனம் செலுத்துவார்கள். 


இப்படியான நிலையில் கடந்த மார்ச் 24 ஆம் தேதி ரமலான் நோன்பு தொடங்கியது. கிட்டதட்ட இன்றுடன் 28 நாட்களை இந்த நோன்பு காலம் கடந்துள்ளது.இன்றைய தினம் மாலை நோன்பு திறந்த பிறகு பிறை பார்க்கப்படும். ஒருவேளை பிறை தென்பட்டால் நாளை ரமலான் பண்டிகை கொண்டாடப்படும். ஒருவேளை பிறை தெரியாவிட்டால் நாளை  மறுநாள் ரமலான் பண்டிகையாக கணக்கிடப்படும். 


முதலமைச்சர் வாழ்த்து 


இதனிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், "மனிதநேயம் போற்றும் ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது உளமார்ந்த நல்வாழ்த்துகளை உரித்தாக்கி மகிழ்கின்றேன். 


அன்பை, அடக்க உணர்வை, எளிமையை போதித்த அண்ணல் நபிகள் பெருமான், “அண்டை வீட்டுக்காரன் பசியோடு இருக்கும்போது நீ மட்டும் சாப்பிடாதே; உன் உழைப்பில் கிடைக்கும் வருவாயில் ஒரு பகுதியை ஏழைகளுக்குக் கொடு” என போதித்து, மானுடம் அனைத்தும் பேரன்பால் பிணைக்கப்பட வேண்டியது என்பதை எடுத்துக் காட்டியவர். சமத்துவம், சகோதரத்துவம் என்ற உன்னத லட்சியங்களை உலகத்திற்கு தனது ஈகையாக வழங்கிச் சென்றவர்.


திராவிட முன்னேற்றக் கழகமும், நமது திராவிட மாடல் அரசும் நபிகள் பெருமானார் காட்டிய சமத்துவ சமுதாயம் அமைக்கும் பணியில் சமரசமின்றித் தனது பயணத்தை தொடருகிறது; என்றென்றும் தொடரும்!


நபிகள் பெருமகனார் போதித்த நெறி வழி நின்று, நோன்புக் கடமைகளை நிறைவேற்றி முடித்துள்ள மனநிறைவோடு, ரமலான் திருநாளைக் கொண்டாடும் அன்பிற்குரிய இஸ்லாமிய சமூகத்தினர் அனைவருக்கும் எனது உள்ளம் நிறைந்த ரமலான் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இஸ்லாமியப் பெருமக்களின் வாழ்வில் என்றென்றும் இன்பமும், நலமும் நிறைந்து இனிமை பெருகட்டும்" என தெரிவித்துள்ளார். 


ஆளுநர் வாழ்த்து


இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாக ஒரு மாத நோன்பை கடைப்பிடித்து, இல்லாதோருக்கு ஈகை அளித்து சகோதரத்துவத்தை முன்னிறுத்தும் ரமலான் பண்டிகையை கொண்டாடும் அனைத்து இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு ஈகைத்திருநாளாம் ரமலான் திருநாள் வாழ்த்துகள் என்று ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.


வைகோ வாழ்த்து 


வையத்து மாந்தர் எல்லாம் மகிழ்ந்திடும் இந்த ஈகைத் திருநாள், மனிதநேயத்தின் மகத்துவத்தையும், ஈதல் இசைபட வாழ்தல் என்பதையே வாழ்வின் ஊதியம் என்ற உன்னதத்தையும் உரைத்திடும் பொன்னாள் ஆகும்.  இஸ்லாமியப் பெருமக்கள் மகிழ்ந்து கொண்டாடி மகிழ்ந்திடும் இந்த நன்னாளில் மனித சமுதாயத்தில் அன்பு, வாய்மை, வாஞ்சை, நேர்மை, பொறுமை, திறமை, ஒற்றுமை, மனிதநேயம், சகோதரத்துவம் பெரிதும் வளர்ந்தோங்கிட மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், இனிய ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார். 


ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து


இறைத்தூதர் நபிகள் நாயகத்தின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடித்து, உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்று கூறி, இந்த இனிய திருநாளில் என் அன்பிற்குரிய இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் என் இதயம் கனிந்த ரம்ஜான் வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை உரித்தாக்கிக் கொள்கிறேன்.