நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு முன்னோட்டமாகத் நடைபெறவுள்ள சேலம் இளைஞரணி மாநாடு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


சேலம் மாவட்டம் ஆத்தூரை அடுத்துள்ள பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் திமுக இளைஞரணியிம்  இரண்டாவது மாநில மாநாடு நாளை (21 ஆம் தேதி) நடைபெற உள்ளது. திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் பங்கேற்று நிகழ்ச்சி பேரூரை ஆற்றவுள்ளார். இதற்கான ஏற்பாடுகள் திமுகவின் முதன்மை செயலாளர் கே.என்.நேரு மேற்பார்வையில் முழு வீச்சில் நடைபெற்றது. 


இந்த மாநாட்டிற்காக இன்று மாலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் சேலம் விமான நிலையம் வந்தடையும் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சேலம் விமான நிலையம், ஓமலூர், கொண்டலாம்பட்டி, சீலநாயக்கன்பட்டி, அயோத்தியாபட்டினம், வாழப்பாடி உள்ளிட்ட பகுதிகளில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.  தொடர்ந்து மாநாடு நடைபெறும் இடத்தை பார்வையிடும் முதலமைச்சர் ஸ்டாலினிடம், சென்னையில் இருந்து செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி வழியாக கொண்டு வரப்பட்ட மாநாடு சுடரை  திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழங்குகிறார். 


இந்த மாநாட்டை முன்னிட்டு சேலத்தில் 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நாளை காலை 9 மணிக்கு தொடங்கும் இளைஞரணி மாநாட்டு இரவு வரை நடைபெறுகிறது. இதில் 5 லட்சம் திமுக தொண்டர்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மாநாடு நடைபெறும் இடம் சேலம்-சென்னை தேசிய நெடுஞ்சாலைகள் அமைந்துள்ளதால் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் திமுக இளைஞரணி மாநாட்டு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி இருவரும் எக்ஸ் வலைத்தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர்.


முதலமைச்சர் வெளியிட்டுள்ள பதிவில், “நாடாளுமன்றத் தேர்தலின் வெற்றிக்கு முன்னோட்டமாகத் நடைபெறவுள்ள சேலம் இளைஞரணி மாநாடு” என தெரிவித்துள்ளார். மேலும் மாநாடு தொடர்பான வீடியோவும் பதிவிட்டுள்ளார். 






இதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “சேலம் அழைக்கிறது செயல்வீரர்களே வாரீர்! லட்சோப லட்ச இளைஞர்கள் கூடிடும் கொள்கைத் திருவிழாவாக நம் திமுக இளைஞரணியின் 2 ஆவது மாநில மாநாடு சேலத்தில் நாளை நடைபெறவிருக்கிறது.






மாநில உரிமைகளை மீட்டெடுத்து இந்திய ஒன்றியத்தை காப்பதற்கு கழகத் தலைவர் அமைத்து தந்திருக்கும் வெற்றிக்களம் இது. இந்தியாவின் வெற்றியின் மூலம் பாசிசத்தை வீழ்த்தி பன்முகத்தன்மை காத்திட சேலத்தில் கூடிடுவோம். அனைவரும் வருக!” என தெரிவித்துள்ளார்.