Parliament Election: தேர்தல் பணி தொடர்புடைய அலுவலர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால், அவர்களை பணியிட மாற்றம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தல் 2024:
நாடாளுமன்ற தேர்தலுக்கான தேதி தொடர்பான அறிவிப்பு இன்னும் ஒரு சில வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதையொட்டி நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தலுக்கான பணிகள் முடுக்கிவிட்டுள்ளன. தமிழகத்தில் ஆளும் கட்சியான திமுகவும் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. தேர்தல் அறிக்கை, தேர்தல் பணிகளை ஒருங்கிணைப்பது மற்றும் கூட்டணி பேச்சுவார்த்தை என 3 குழுக்களை அமைத்து அண்மையில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதனிடையே, தேர்தல் ஆணையமும் தேர்தலுக்கான ஆயத்த பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது.
தேர்தல் அலுவலர்களை பணியிட மாற்றம் செய்ய அறிவுரை:
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியான சத்யபிரதா சாகு, தமிழக அரசுக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரியும் தேர்தல் பணி தொடர்புடைய அலுவலர்களை, வரும் 31ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய அறிவுறுத்தியுள்ளார். தேர்தலில் முறைகேடுகளை தவிர்ப்பது, நடுநிலையாக தேர்தலை நடத்துவது, அதிகாரிகள் எந்தவொரு குறிப்பிட்ட தரப்புக்கும் ஆதரவாக செயல்படுவதை தவிர்க்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் வரும் 31ம் தேதிக்குள் குறிப்பிட்ட தேர்தல் அலுவலர்களை பணியிடம் மாற்றம் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
யார் யாரை மாற்ற வேண்டும்?
தமிழக அரசுக்கு சத்யபிரதா சாகு எழுதியுள்ள கடிதத்தில்,
- தேர்தல் பணியில் நேரடியாக தொடர்புடைய அலுவலர்கள், சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால் அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்
- ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிந்தால், வரும் ஜூன் 30ல் மூன்று ஆண்டுகள் நிறைவடைவதாக இருந்தாலும், அவர்களை இடமாற்றம் செய்ய வேண்டும்
- பதவி உயர்வு அளிக்கப்பட்டு ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றினாலும், இடமாற்றம் செய்ய வேண்டும்
- வாக்காளர் பட்டியல் தயாரிப்பு போன்ற பணிகளில் ஈடுபட்டுள்ள அலுவலர்கள், தலைமை தேர்தல் அதிகாரி ஒப்புதல் பெற்ற பின், அப்பணியில் தொடர அனுமதிக்கலாம். வேறு ஏதேனும் காரணத்துக்காக, ஒருவர் அப்பணியில் தொடர வேண்டுமானால், தேர்தல் கமிஷன் ஒப்புதல் அவசியம்
- ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிவோர், ஆறு மாதங்களில் ஓய்வு பெறுவதாக இருந்தால், அவர்களுக்கு விலக்கு அளிக்கலாம். ஆனால், அவர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்தக் கூடாது
- வட்டார வளர்ச்சி அலுவலர்கள், தாசில்தார்கள், உதவி காவல் ஆய்வாளர்கள் போன்றோர், அதே மாவட்டத்திற்குள் இடமாற்றம் செய்யப்படலாம். ஆனால், அவர்கள் வீடு உள்ள சட்டசபை தொகுதியில் பணியாற்ற அனுமதிக்கக் கூடாது
- ஒரே இடத்தில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் இருப்போரை, வரும் 31ம் தேதிக்குள் இடமாற்றம் செய்ய வேண்டும்” என சத்யபிரதா சாகு அறிவுறுத்தியுள்ளார்.