EPS Annamalai: அதிமுக மற்றும் தமிழக பாஜக இடையேயான கருத்து மோதல் போலியானது என, திமுக விமர்சித்து வருகிறது.


அதிமுக - பாஜக மோதல்


பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து, மக்களவை தேர்தலுக்கு முன்னதாக அதிமுக பிரிந்தது. அது முதலே இரண்டு கட்சி மேல்மட்ட தலைவர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் இடையே தொடர்ந்து கருத்து மோதல் நிலவி வருகிறது. இரண்டு கட்சிகளும் பரஸ்பரம் குற்றம்சாட்டி வருகின்றன.  இந்நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மீண்டும் அதிமுக மற்றும் பாஜக இடையேயான கருத்து மோதல் வெடித்துள்ளது. ஒருவரை ஒருவர் நேரடியாக குற்றம்சாட்டி வருகின்றனர்.


வாயில் வடை சுடும் அண்ணாமலை - எடப்பாடி பழனிசாமி:


இந்நிலையில் கோவையில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “அண்ணாமலை வந்த பிறகுதான் பாஜகவிற்கு பலம் வந்ததுபோல் மாயையை உருவாக்குகிறார். பாஜக தலைவராக தமிழ்நாட்டு மக்களுக்கு மத்திய அரசிடம் இருந்து என்ன திட்டங்களை அண்ணாமலை பெற்று தந்திருக்கிறார்? தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாத பாஜக தலைவர் அண்ணாமலை வாயால் வடை சுடுகிறார். அந்த கட்சி தமிழ்நாட்டில் வளரக்கூட இல்லை” என கடுமையாக சாடியிருந்தார்.


இதையும் படியுங்கள்: BSP Armstrong Murder: தமிழகத்தை உலுக்கிய ஆம்ஸ்ட்ராங் படுகொலை - காரணம் என்ன? சரணடைந்த 8 பேர்


பிரதமரை முதுகில் குத்திய எடப்பாடி - அண்ணாமலை:


எடப்பாடியின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் வகையில் விக்கிரவாண்டியில் அண்ணாமலை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “அதிமுக சிறிது சிறிதாக கரையத் தொடங்கிவிட்டது. தன் கட்சியை காப்பாற்ற முடியாத எடப்பாடி பழனிசாமி எனக்கு அறிவுரை கூறத் தேவையில்லை. சிலர் சுயலாபத்துடன் செயல்படுவதால் அதிமுக அழிந்து கொண்டிருக்கிறது. நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கே பொருந்தும். நம்பிக்கை வைத்த பிரதமர் மோடியின் முதுகிலேயே குத்தியவர்தான் அவர். தற்போது சட்ட ஒழுங்கு சரியில்லை என விக்கிரவாண்டி தேர்தலை புறக்கணித்த எடப்பாடி, 2026 தேர்தலையும் புறக்கணிப்பாரா” என கேள்வி எழுப்பினர். இரண்டு தலைவர்களின் பேச்சையும் குறிப்பிட்டு, தற்போது இரு கட்சி நிர்வாகிகளும் சமூக வலைதளங்களில் களமாடி வருகின்றனர்.


விமர்சிக்கும் திமுக:


அதிமுக மற்றும் பாஜக இடையேயான இந்த கருத்து மோதல் என்பது ஒரு கண்கட்டி நாடகம் மற்றும் போலியானது என திமுகவினர் விமர்சித்து வருகின்றனர். ஒருவேளை உண்மையிலேயே இரண்டு கட்சிகளும் பிரிந்து இருந்தால், பாஜக கூட்டணியில் உள்ள பாமக நேரடியாக அதிமுகவிடம் ஆதரவு கோருமா? விக்கிரவாண்டி தொகுதி தேர்தலில் வென்றுவிட என்பதற்காக, தற்போது மீண்டும் அதிமுக மற்றும் பாஜக மோதலில் ஈடுபடுவதை போன்று நடிக்கின்றன. இதனை மக்கள் புறக்கணித்து விடுவார்கள் என திமுக வட்டாரங்கள் சாடியுள்ளன.