சமூக ஊடகங்களிலும் சில டிஜிட்டல் ஊடகங்களிலும் பரப்பப்படும் அவதூறு செய்திகளால் தேசத்தின் மீதான நம்பகத்தன்மையும்,தேசத்தின் மீது பிற நாட்டவர் கொள்ளும் மதிப்பும் சிதைக்கப்படுகிறது என்று சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.


கடந்த அக்டோபர் 18ம் தேதி நீதிபதி தண்டபாணி தலைமையிலான அமர்வு தமிழக அரசுக்கு ஒரு உத்தரவைப் பிறப்பித்தது. அதில், அரசு ஒரு சிறப்பு செல் அமைத்து அதன் மூலம் தவறான, அவதூறான சமூக ஊடக பதிவு,நம்பகத்தன்மையற்ற செய்திகளை தொடக்கத்திலேயே அகற்றும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.


நீதிபதி இது குறித்து, புற்றீசல் போல் உருவாகும் டிஜிட்டல் ஊடகம், குறிப்பாக சமூக ஊடக தளங்கள் அரசியல் சாசனம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள சில உரிமைகளைக் கொண்டு, அதன் அர்த்தத்தை முழுமையாகப் புரிந்து கொள்ளாமலேயே குடிமக்கள் சமூக வலைதளங்கள் வாயிலாக தேசத்தின் மாண்பினைக் குறைக்கின்றனர். உலகின் பிற நாடுகள் நம் தேசத்தின் மீது கொண்டுள்ள மாண்பை சிதைக்கின்றனர் என்றார்.


அதற்கு தமிழ்நாடு எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் தரப்பில் சமூக வலைதளங்களை கண்காணிக்கத் தேவையான கண்காணிப்பு உபகரணங்களை வாங்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. அவை அடுத்த வாரம் பிரிக்கப்படும். அதன்பின்னர் உரிய நடவடிக்கைகல் எடுக்கப்படும் என்று தெரிவித்தது.


முன்னதாக கடந்த ஜனவரி 2020ல் தமிழக டிஜிபிக்கு சமூக வலைதளங்களில் அவதூறான தகவல்கள், செய்திகள், வீடியோக்களை பகிர்பவர்களைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க ஏதுவாக ஒவ்வொரு மாவட்டத்திலும் ஸ்டேஷன் ஹவுஸில் சிறப்பு கண்காணிப்புக் குழுவை அமைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது நினைவுகூரத்தக்கது. குறிப்பாக அதிகாரிகள், அரசியல் சாசனப் பதவிகளில் இருப்பவர்கள் மீது அவதூறு பரப்புவர்களைக் கண்காணிக்க உத்தரவிட்டது.


டிஜிட்டல் வளர்ச்சி பல்வேறு சமூக சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைகிறது. சமூக வலைதள ஊடக்ங்கள், இணையதளங்கள் சில மக்களிடையே வெறுப்பை உருவாக்கும் வகையில் செயல்பட்டு வருகின்றன. இதனால் பல்வேறு குற்றச் செயல்களும் நடைபெறுகின்றன. அதனால், இதுபோன்ற ஊடகங்களை வேரறுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் நீண்ட காலமாகவே கோரிக்கை விடுத்து வருகின்றனர்.


மத்திய அரசு கொண்டுவந்த சட்டம்:


ஏற்கெனவே, சமூக ஊடகங்களில் இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான தகவல்கள் பகிரப்படுவதாக கூறி, அதை தடுப்பதற்காக கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (ஐடி) விதிகள்-2021ஐ மத்திய அரசு கொண்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்தவும், ஆன்லைன் செய்திகளை ஒழுங்குபடுத்தவுமே விதிகள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும், ஒரு சட்டத்தால் தடை செய்யப்பட்ட விஷயங்களை வெளியிடவோ, பரப்பவோ கூடாது எனவும் தெரிவித்தது. நாட்டின் ஒற்றுமை இறையாண்மைக்கு ஊறு விளைவிப்பது, நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவது, அண்டை நாட்டு உறவை குலைக்கும் தகவலை பகிர்வது போன்ற செயல்பாடுகளை தடுக்கும் வகையிலேயே சட்டம் கொண்டு வரப்பட்டதாகவும் மத்திய அரசுத் தரப்பில் கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


ஆனால் மத்திய அரசின் சட்டத்தை எதிர்த்து தமிழ்நாட்டிலேயே பல குரல்கள் எழுந்த நிலையில் தற்போது சென்னை உயர்நீதிமன்றமும் சமூக வலைதள அவதூறுகள், டிஜிட்டல் ஊடக நம்பகத்தன்மையற்ற செய்திகள் குறித்து கவலை தெரிவித்துள்ளது.