உலகம் முழுவதும் இன்று கிறிஸ்துமஸ் தினம் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும் என முதலமைச்சர் ஸ்டாலின் கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தி பகிர்ந்துள்ளார்.


கொரோனா தொற்று காரணமாக கடந்த ஆண்டுகளில் கிறிஸ்துமஸ் விழாக்கள் எளிமையாகக் கொண்டாடப்பட்ட நிலையில், சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விழாவை இந்த ஆண்டு மக்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.


முதலமைச்சர் ஸ்டாலின் ட்வீட்


அதன்படி தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் கிறிஸ்துமஸ் விழா இன்று களைக்கட்டியுள்ள நிலையில் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாழ்த்துகளை கிறிஸ்துவ மக்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.


அந்த வகையில் முன்னதாக முதலமைச்சர் ஸ்டாலின் தனது வாழ்த்துகளை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.  "அன்பின் பேரொளியாய் அவனியை நிறைத்த இயேசுபிரான் பிறந்த திருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள். அமைதியும் அன்பும் நிலைத்த சமத்துவ உலகம் பிறந்திட இயேசு கிறித்துவின் நன்னெறிகள் நமக்கு வழிகாட்டட்டும்!" என ட்வீட் செய்துள்ளார். 


 






முன்னதாக பெரம்பூர், டான்பாஸ்கோ பள்ளி வளாகத்தில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் பெருவிழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது:


”ஆண்டுக்கொரு முறை வரக்கூடிய கிறிஸ்துமஸ் விழாவிலே நான் கலந்து கொள்வதுண்டு. இது ஆண்டாண்டுதான் வரவேண்டுமா? அடிக்கடி வரக்கூடாதா என்ற ஏக்கம் கூட எனக்கு வருவதுண்டு. அந்த அளவிற்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய விழாவாக இந்த விழா அமைந்து கொண்டிருக்கிறது.  இதை ஒரு  மதத்தின் விழாவாக நாம் நினைக்க வேண்டிய அவசியமில்லை.அனைத்து மதத்திற்கும் நல்லிணக்கமாக நடைபெறக்கூடிய  விழாவாக இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது. 


ஒன்றே குலம் ஒருவனே தேவன்


திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தினுடைய நம்பிக்கைகளுக்கும் எதிரானது அல்ல. இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் நடத்திப் பிழைக்கலாம் என்று நினைக்க கூடியவர்களுக்கு மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டி அதிலே லாபம் பெறலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடியவர்களுக்கு எதிரான அரசுதான் இன்றைக்கு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது.


‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது திருமூலர் வாக்கு. அதைத்தான் திராவிட முன்னேற்றக் .கழகத்தின் பார்வையாகப் பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்வைத்து, சமத்துவ சமுதாயத்திற்கான சகோதரத்துவ உணர்வை வளர்த்து, சமூகநீதிப் பாதையில் பயணிக்கச் செய்தார்.


இயேசுநாதராக இருந்தாலும், அண்ணல் முகமது நபியாக இருந்தாலும், அருட்பிரகாச வள்ளலாராக இருந்தாலும் ஏழையின் பசியைப் போக்கிட வேண்டும், அவர்களின் துன்பங்களைக் களைந்திட வேண்டும் என்பதையே அருள்நெறியாக முன்வைத்தார்கள். மதநல்லிணக்கத்தை முன்வைத்து, ஒற்றுமையுடன் பயணிப்போம். கிறிஸ்துமஸ் திருநாள் சிறப்பாக அமையட்டும்” எனப் பேசினார்.