வரும் திங்கள் கிழமை அதாவது டிசம்பர் 25ஆம் தேதி உலகம் முழுவதும் கிருஸ்துமஸ் கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு திமுக சார்பில் நடத்திய கிருஸ்துமஸ் விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.  இந்த விழா சென்னை பெரம்பூரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடைபெற்றது. அதில் முதலமைச்சர் ஸ்டாலின் பேசியதாவது, கிருஸ்துமஸ் விழாவை இந்து அறநிலையத் துறை அமைச்சர் நடத்துக்கின்றார், இதுதான் திராவிட மாடல். இந்த கிருஸ்துமஸ் விழா சமத்துவ பெருவிழாவாக நடைபெற்று வருகின்றது. நமது இந்திய நாடு என்பது பல்வேறு மதத்தினை பின்பற்றும் மக்கள் வாழும் நாடு. வேறு வேறு நம்பிக்கைகள் மத நம்பிக்கைகள் இருந்தாலும், அந்த மதம் அவரவர்களுக்கு சொந்தமானதாக இருக்குமே தவிர மற்றவர்களுக்கு எதிரானதாக இருக்காது. ஏனென்றால் அனைத்து மதமும் அன்பை மட்டுமே வலியுறுத்திச் சொல்லுகின்றது. எந்த மதமும் வேறுபாட்டை போதிப்பதில்லை. 


இந்த விழா மேடையில் கூட நாம் அனைவரும் ஒற்றுமையாகத்தான் உள்ளோம். ஆனால் நம் ஒற்றுமையாக இருப்பதை சிலர் விரும்பவில்லை. மதத்தை அரசியல் லாபங்களுக்காக பயன்படுத்தியவர்களால் இந்த ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால் தான் இந்த ஒற்றுமையையும் மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் திராவிட முன்னேற்ற கழகத்தினையும் யாருக்கும் பிடிப்பதில்லை. நமது திராவிட மாடல் ஆட்சியில் அனைத்து மதத்தினைச் சார்ந்தவர்களும் ஒற்றுமையாக மகிழ்ச்சியாக வாழ்கின்றனர். இதைத் தடுக்க ஒரு கூட்டம் தவியா தவிக்கின்றது. ஆனால் உண்மை என்னவென்றால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் அந்த கூட்டத்தால் இந்த மண்ணில் வெற்றி பெறவே முடியாது. ஒரு மனிதன் தன் மீதும் அன்பு செலுத்த வேண்டும், பிற உயிர்கள் மீதும் அன்பு செலுத்த வேண்டும் எனவும் கூறுகின்றது. இயேசு கிருஸ்துவின் போதனைகளும் அதனைத்தான் போதிக்கின்றது. உன்மீது அன்பு கொள்வதைப் போல் உனக்கு அடுத்து இருக்கும் உயிர்கள் இடத்திலும் அன்பு கொள்ளவேண்டும் என யேசு கூறுகின்றார். சமத்துவம், ஒற்றுமை, சகோதத்துவம், நீதி, இரக்கம், தியாகம் பகிர்தல் என இயேசு கிருஸ்து இந்த மனித குலத்துக்கு கற்றுக்கொடுத்த மதீப்பீடுகளை வரிசைப்படுத்த முடியும். மனிதர்கள் அனைவரும் சமம்தான் என்பது சமத்துவம், யாரையும் வேற்றுமையாக பார்க்காதே என்பது சகோதரத்துவம். அனைவருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதுதான் ஒற்றுமை. ஏழைகள் மீது கருணை காட்டுவதுதான் இரக்கம். அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பதுதான் நீதி. மற்றவர்களுக்காக வாதாடுவதுதான் தியாகம். உன்னிடம் இருப்பதை இல்லாதவர்களுக்கு கொடுப்பதுதான் பகிர்தல் இவற்றையெல்லாம் நம்முடைய கிருஸ்துவம் சொல்லுகின்றது. இந்த உன்னதமான உணர்வு ஒவ்வொரு மனிதருக்குள்ளும் இருந்தால் அதுதான் சமத்துவ நாடாக அமையும். சென்னை வெள்ளத்தின்போது அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் உழைத்தார்கள். அதேநேரத்தில் 24 மணி நேரமும் மக்களோடு மக்களாக இருந்தவர் அமைச்சர் சேகர் பாபு” என பேசினார்.