கன்னியாகுமரி மாவட்டத்தில் நடுக்கடலில் மீனவர்கள் கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடிய நிகழ்வு பொதுமக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 


இயேசு கிறிஸ்து பிறப்பை உணர்த்தும் வகையில் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் திருவிழா நாடு முழுவதும் நேற்று உற்சாகமாக கொண்டாடப்பட்டது.  இதற்காக தேவாலயங்கள் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. பின்னர் கிறிஸ்தவ மக்கள் உற்சாகமாக கேக் வெட்டி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். மதங்களை கடந்து பலரும் தேவாலயங்களில் சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த கிறிஸ்துமஸ் குடில்களை பார்வையிட்டு, பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர். 


கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பிரதமர், ஆளுநர், முதலமைச்சர், திரைப்பிரபலங்கள் என பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வந்தனர்.  அதேசமயம் தமிழகத்தில் சென்னை, நாகப்பட்டினம், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய இடங்களில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழா சிறப்பு வாய்ந்தது. அதன்படி வேளாங்கண்ணி பேராலய வளாகத்தில் விண்மீன் ஆலயம் அருகே உள்ள புனித சவேரியார் திடலில் கிறிஸ்துமஸ் சிறப்பு வழிபாடுகள்  நள்ளிரவு மறையுரை, கூட்டுத் திருப்பலியுடன் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. தமிழ் , ஆங்கிலம், மலையாளம், கன்னடம், உருது  உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் திருப்பலிகள் நிறைவேற்றப்பட்டது.


இந்த கிறிஸ்துமஸ் விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அதேபோல் உலக புகழ்பெற்ற மணல் சிற்ப கலைஞர் சுதர்சன் பட்நாயக்(Sudarsan Pattnaik) கிறிஸ்துமஸ் பண்டிகையின் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக கடற்கரையில் தக்காளியை கொண்டு பிரம்மாண்டமான சாண்டா கிளாஸ் தாத்தா சிற்பத்தை உருவாக்கியிருந்தார். 


கன்னியாகுமரி மாவட்டத்திலும் கொண்டாட்டங்கள் களைக்கட்டிய நிலையில், குளச்சல் பகுதியை சேர்ந்த மீனவர்கள் சிலர் தங்கள் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்களுடன் கடலுக்குள் படகில் சென்று கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். ஆட்டம், பாட்டம் என களைக்கட்டிய பண்டிகை குழந்தைகளால் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மேலும் மீனவர்கள் தங்கள் படகுகளில் வண்ண பலூன்கள் கட்டி, ஒலிபெருக்கி வைத்து பாடல்களை இசைத்து நடமாடினர். இதன் புகைப்படங்கள் அனைவரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.