பிற்காலத்தில் தமிழ்நாட்டை ஆண்ட சோழ மன்னர்கள் தங்கள் சோழ பேரரசு பங்குபெறும் போர்களில் தோல்வியை சந்திக்கக் கூடாது என்பதற்காக நிசும்பசூதனி எனும் தேவியின் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட்டுவந்துள்ளனர். இத்தகைய சிறப்புமிக்க நிசும்பசூதனி தேவி , சோழர்களின் காவல் தெய்வம் மட்டும் இல்லாமல் குலதெய்வமாகவும் வணங்கப்பட்டு வந்தது .
இந்த அறிய சிலை , திருப்பத்தூர் தூயநெஞ்சக் கல்லூரியின் தமிழ்த்துறை உதவிப்பேராசிரியர் முனைவர் ஆ.பிரபு மற்றும் சமூக ஆர்வலர் வே.இராதாகிருஷ்ணன் ஆகியோர் மாடப்பள்ளி எனும் கிராமத்தில் கள ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருந்த பொழுது இந்த சிலையை கண்டுபிடித்துள்ளனர் . இதுகுறித்து முனைவர் ஆ.பிரபு கூறியதாவது, “திருப்பத்தூரில் இருந்து 6 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சிற்றூர் மாடப்பள்ளி. இங்குள்ள திரெளபதி அம்மன் கோவில் வளாகத்தில் பழமையான சிற்பம் ஒன்று இருப்பதைக் கண்டோம். தொடர்ந்து அப்பகுதி மக்களின் ஒத்துழைப்போடு அச்சிற்பத்தினை தண்ணீர் கொண்டு சுத்தம்செய்து ஆய்வு செய்தோம், அப்போது அது சோழர்களின் குலதெய்வமாகக் கருதப்பட்ட ‘நிசும்பசூதனி’ என்பதை அறிந்தோம்.
இங்குள்ள கோவில் திருப்பணிகளின் போது நிலத்தினுள் புதைந்திருந்த இச்சிற்பத்தினை எடுத்து கோவில் வளாகத்தில் வைத்துள்ளனர்.
அன்றைய காலத்தில் நிசும்பசூதனியை வழிப்பட்ட பின்னரே ஒவ்வொரு போருக்கும் சோழ மன்னர்கள் சென்றனர். அவ்வாறு சென்ற போர்களில் சிறப்பான வெற்றியை அடைந்தனர் என்றும் சொல்லப்படுகின்றது. தங்கள் வெற்றிக்குக் காரணமான நிசும்பசூதனியை குலதெய்வமாக சோழர்கள் வழிபட்டனர். சோழர்களின் தலைநகராக விளங்கிய தஞ்சையை காக்கும் காவல் தெய்வமாகவும் நிசும்பசூதனியைக் கருதினர். தற்பொழுது நிசும்பசூதனி தேவியை தஞ்சாவூர் பகுதிகளில் தாலி வரம் தரும் தெய்வமாக வழிபட்டு வருகின்றனர் .இத்தெய்வம் நிசும்பசூதனி அல்லது வடபத்ரகாளியம்மன் என்று அறியப்படுகின்றார்.
மாடப்பள்ளியில் காணப்படும் நிசும்பசூதனி மூன்று அடி உயரத்தில் எட்டுக்கரங்களுடனும் சிம்மவாகனத்தில் காணப்படுகின்றார். தனது வலதுகாலைத் தரையில் ஊன்றி இடதுகாலை நிசும்பன் என்ற அசுரனின் உடல் மீது அழுத்திய படி சூலத்தால் குத்தியபடி காட்சியளிக்கிறார். காதுகளில் பிரேதகுண்டலத்தை அணிகலனாகச் சூடியுள்ளார். எட்டுக்கரங்களில் சூலம், கேடயம், வாள், வில், அம்பு, கபாலம், பாசம், மணியைத் தாங்கியவாறு அருமையாக சிற்பத்தினை வடிவமைத்துள்ளனர். நிசும்பன் என்ற கொடிய அசுரனை வதம் செய்தமையால் ‘நிசும்பசூதனி’ என்றழைக்கப்படுகின்றார். மாடப்பள்ளிக்கு அருகாமையில் உள்ள மடவாளம் கிராமத்தில் தான் வரலாற்றுச் சிறப்புமிக்க அங்கநாதீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவில் மூன்றாம் குலோத்துங்க சோழன் ஆட்சிகாலத்தில் கட்டப்பட்டதாக வரலாறுகூறுகிறது.
அச்சுற்றுவட்டாரத்தில் இச்சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது கவனத்திற்குரியதாகும். சோழர்களுக்கே உரிய சிறப்பான கலைபாணியில் உள்ள சிற்பத்தின் காலம் கி.பி. 12ஆம் நூற்றாண்டாக இருக்கலாம் என வரலாற்றுத்துறை ஆய்வாளர் முனைவர் இரா.சேகர் ABP செய்தி குழுமத்திடம் தெரிவித்தார் . வரலாற்றுச் சிறப்புமிக்க இச்சிற்பம் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்றாகும்” எனவும் கூறினார்