நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி பகுதியில் உள்ள ராணுவ மையத்தில் ஹெலிகாப்டர் மூலம் பயிற்சி மேற்கொண்டபோது, அடர் பனிமூட்டம் காரணமாக ராணுவ ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. காட்டேரி என்ற இடத்தில் நடந்த விபத்தில் 14 பேர் பயணித்ததாகவும், 2 பேர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், அதில் பயணித்த ராணுவ உயரதிகாரி நிலைமை என்ன ஆனது என்பது குறித்து இதுவரை தெரியவில்லை என நீலகிரி ஆட்சியர் அம்ரித் தகவல் தெரிவித்துள்ளார்.
மாவட்ட ஆட்சியர், ராணுவத்தினர், காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தற்போது மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து நடைபெற்ற மீட்பு பணியில் 4 உடல்கள் மீட்கப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. ஆனால், ராணுவ தரப்பில் இருந்து இன்னும் அதிகாரபூர்வ தகவல் வெளியிடவில்லை.
விபத்துக்குள்ளான இடத்தில் உடல்கள் முழுவதும் எரிந்தநிலையில் உள்ளதால் அடையாளம் காணப்படவில்லை என்றும் ராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும், ராணுவ வீரர்கள் பயணித்த ஹெலிகாப்டர் M-17 வகையை சேர்ந்தது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஹெலிகாப்டரில் 2 விமானிகள், 9 வீரர்கள், ராணுவ உயரதிகாரி மற்றும் அவரது மனைவி இருந்ததாகவும் தகவல் கிடைத்துள்ளது.
முப்படைகளின் தலைமைத்தளபதி பயணித்த விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரணை நடத்த விமானப்படை உத்தரவிட்டுள்ளது.