Children Films: அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடல்: விதிமுறைகளை வெளியிட்ட கல்வித்துறை

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதற்கான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

அரசுப்பள்ளிகளில் 6 முதல் 9-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. இதற்கான புதிய வழிகாட்டுதல்களை பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

Continues below advertisement

இதுகுறித்துத் தமிழ்நாடு பள்ளிக் கல்வி ஆணையர்‌ மற்றும்‌ தொடக்கக்கல்வி இயக்குநர் இந்தக் கல்வியாண்டில்‌ சிறார்‌ திரைப்படங்கள்‌ திரையிடுதலில் பின்பற்ற வேண்டிய விதிமுறைகள் சார்ந்து சுற்றறிக்கையை வெளியிட்டுள்ளார். 

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

மாதத்தின்‌ ஒவ்வொரு இரண்டாவது வாரமும்‌ அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ சிறார்‌ திரைப்படங்கள்‌ திரையிடப்பட்டு வருகின்றன. திரைப்படங்கள்‌ மாணவர்களுடைய சிந்தனை மற்றும்‌ செயல்பாடுகளில்‌ ஏற்படுத்தும்‌ தாக்கம்‌ அளப்பரியது. இக்காட்சி ஊடகத்தின்‌ வாயிலாக மாணவர்களின்‌ முன்னேற்றம்‌, புதிய பார்வை மற்றும்‌ வாழ்வியல்‌ நற்பண்புகளை மேம்படுத்துவதே இம்முயற்சியின்‌ முக்கிய நோக்கமாகும்‌.

பள்ளிகளில்‌ சிறார்‌ திரைப்படங்கள்‌ திரையிடுவது சார்ந்து வழிகாட்டு நெறிமுறைகள்‌, அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும்‌ மேல்நிலைப்‌ பள்ளிகளில்‌ 6 முதல்‌ 9-ஆம்‌ வகுப்பு வரை பயிலும்‌ மாணவர்களுக்கு, சிறார்‌ திரைப்படங்களை அவற்றிற்கென ஒதுக்கப்பட்டுள்ள பாடவேளைகளில்‌ திரையிட வேண்டும்‌.

அதிக எண்ணிக்கையில்‌ மாணவர்கள்‌ இருப்பின்‌ குழுக்களாகப்‌ பிரித்துத்‌ திரையிட வேண்டும்‌.

ஒவ்வொரு பள்ளியிலும்‌ அச்செயல்பாடுகளுக்கென ஒரு ஆசிரியருக்குப்‌ பொறுப்பளிக்க வேண்டும்‌. இவ்வாசிரியர்களுக்கு தொழில்‌நுட்ப மேலாண்மை, திட்டமிடுதல்‌ மற்றும்‌ மாணவர்களை ஒருங்கிணைத்தல்‌ சார்ந்த சிறப்புப்‌ பயிற்சி வழங்கப்படும்‌. இவ்வாசிரியர்‌ மூலம்‌ பள்‌ளியிலுள்ள 6 முதல்‌ 9 ஆம்‌ வகுப்பு வரை பயிற்றுவிக்கும்‌ பிற ஆசிரியர்களுக்கும்‌ இப்பயிற்சி வழங்கப்பட்டு சுழற்சி முறையில்‌ பிற ஆசிரியர்களையும்‌ இந்நிகழ்வுகளில்‌ ஈடுபடுத்துதல்‌ வேண்டும்‌.

திரைப்படக்காட்டி / தொலைக்காட்சிப்பெட்டி /ஒலிபெருக்கி இல்லாத பள்ளிகளில்‌ பள்ளி மேலாண்மைக்‌ குழுக்கள்‌ வாயிலாக வாடகைக்குப்‌ பெற்றுத்‌ திரையிடவேண்டும்‌.

திரைப்படம்‌ திரையிடப்படுவதற்கு முன்பு சம்பந்தப்பட்ட ஆசிரியர்‌ மாணவர்களிடம்‌ திரைப்படம்‌ குறித்து சிறு உரையாடல்‌ நிகழ்த்தி, மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்‌.

திரைப்படம்‌ முடிந்தபிறகு, காட்‌ சிப்படுத்தப்பட்ட திரைப்படத்தின்‌ மையக்கருத்து அல்லது தாக்கம்‌ சார்ந்து ஒரு உரையாடலை மாணவர்களிடையே நிகழ்த்த வேண்டும்‌. மேலும்‌, மாணவர்களின்‌ கருத்துகளை இணைப்பில்‌ வழங்கப்பட்டுள்ள பின்னூட்டக்‌ கேள்வித்தாள்‌ வாயிலாகப்‌ பெறுதல்‌ வேண்டும்‌.
 
ஏதேனும்‌ 5 மாணவர்களை (வழக்கமாக வகுப்பில்‌ பேசாத மாணவர்களை முன்னிலைப்படுத்துதல்‌ நலம்‌) ஆசிரியர்‌ கண்டறிந்து அனைத்து மாணவர்கள்‌ முன்னிலையிலும்‌ 2-3 நிமிடங்கள்‌ திரைப்படம்‌ குறித்து பேசச்‌ செய்ய வேண்டும்‌. பின்னர்‌, அனைத்து மாணவர்களையும்‌ திரைப்படம்‌ குறித்து தங்கள்‌ கருத்துக்களை அவர்கள்‌ சொந்த நடையில்‌ எழுதித்‌ தரச்‌ சொல்ல வேண்டும்‌.


மாணவனின்‌ கருத்துகள்‌, படம்‌ குறித்த விமர்சனமாகவோ, பாத்திரம்‌ குறித்த திறனாய்வாகவோ, படக்கதைச்‌ சுருக்கமாகவோ, படத்தில்‌தான்‌ உணர்ந்தவற்றை விவரிப்பதாகவோ இருக்கலாம்‌. அனைத்து மாணவர்களின்‌ படைப்புகளையும்‌ ஆவணப்படுத்த வேண்டும்‌. சிறந்த படைப்புகளைப் பள்ளிக் கல்வித்துறையால்‌ வெளியிடப்படும்‌ சிறார்‌ இதழில்‌ இடம்பெறச்‌ செய்ய அனுப்பி வைக்க வேண்டும்‌.

ஒவ்வொரு மாதமும்‌ திரையிடப்பட வேண்டிய திரைப்படத்திற்கான இணைப்பு பள்ளிகளுக்கு அனுப்பப்படும்‌.

பள்ளி அளவில்‌ ஒவ்வொரு மாதமும்‌ சிறந்து விளங்கும்‌ மாணவர்களை ஒன்றிய அளவிலும்‌ ஒன்றிய அளவில்‌ தெரிவு செய்யப்பட்ட மாணவர்களை மாவட்ட அளவிலும்‌ பங்கேற்க வாய்ப்பளித்தல்‌ வேண்டும்‌. ஒருமுறை பள்ளியளவில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவன்‌/மாணவியை அடுத்த மாதம்‌ தேர்ந்தெடுத்தல்‌ கட்டாயமாகத்‌ தவிர்க்கப்பட வேண்டும்‌.

ஒவ்வொரு மாதமும்‌ இவ்வாறு மாவட்ட அளவில்‌ தெரிவு பெறும்‌ மாணவர்கள்‌ அனைவரும்‌ ஆண்டுக்கொருமுறை மாநில அளவில்‌ நடைபெறும்‌ சிறார்‌ திரைப்படத்‌ திருவிழாவில்‌ பங்கேற்பர்‌. அந்நிகழ்வில்‌ கலைத்துறையைச்‌ சார்ந்த வல்லுநர்களோடு கலந்துரையாடுவர்‌.

மாநில அளவில்‌ பங்கேற்கும்‌ மாணவர்களில்‌ சிறந்து விளங்கும்‌ 15 மாணவர்கள்‌ தெரிவு செய்யப்பட்டு வெளிநாடுகளுக்கு கல்விச்‌ சுற்றுலா அழைத்துச்‌ செல்லப்படுவார்கள்‌.

மேற்குறிப்பிட்டுள்ள அனைத்து வழிகாட்டு நெறிமுறைகளையும்‌ தவறாது பின்பற்றி இந்நிகழ்வினை பள்ளிகளில்‌ சிறப்பாகச்‌ செயல்படுத்திட அனைத்து நடவடிக்கைகளையும்‌ மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்கள்‌ கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்‌. 

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Continues below advertisement