வடகிழக்கு பருவ மழை தமிழகம், பாண்டிச்சேரி, கேரளம் , ஆந்திரா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தமிழகத்தில் சுமார் 25- க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த இரு நாட்களாக பெய்து வரும் தொடர் கனமழையின், காரணமாக மக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது. ஏரிகள் நிறைந்த மாவட்டம் என பெயர் கொண்ட , காஞ்சிபுரம் மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் கருதப்படுகிறது. லட்சக்கணக்கான ஏக்கர்களில் நெற்பயிர்கள், கரும்பு, எள்ளு, கடலை போன்றவை பயிரிடப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டதில் உள்ள வாலாஜாபாத், உத்திரமேரூர், குன்றத்தூர், காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் ஆகிய 5 வட்டங்களிலும் மழை பாதிப்பு அதிகம் உள்ளது. காஞ்சிபுரம் அடுத்துள்ள வேளியூர் ஊராட்சியில், சுமார் 900 ஏக்கர் நிலங்களில் 250 க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயிரிட்டு வருகின்றார்கள். மாவட்டத்தில் விட்டு விட்டு பெய்து, வரும் கனமழையின் காரணமாக வேளீயூர் கிராமத்தில், சுமார் 350 ஏக்கர் விவசாய நிலங்களில், அறுவடைக்கு ஒரு சில நாட்களே உள்ள நிலையில் தண்ணீர் தேங்கி நெற்பெயர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சாய்ந்து முளைக்க ஆரம்பித்துவிட்டது.
விவசாயிகள் அங்கும் இங்கும் கடன் வாங்கி விவசாயம் செய்து வருகின்ற நிலையில், அறுவடை நேரத்தில் விவசாய நிலங்கள் அனைத்தும் வெள்ள காடாக காட்சியளிப்பதைக் கண்டு விவசாயிகள் செய்வதறியாமல் உள்ளனர். இந்த மழை இன்னும் ஒரு சில தினங்கள் தொடர்ந்தால், பத்து சதவீத நெல்மணிகளை கூட அறுவடை செய்ய முடியாது என கண்ணீர் மல்க கூறுகின்றனர். இந்த மழை காரணமாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் வேளியூர், புதுப்பாக்கம், பரந்தூர், களியனூர் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடைக்கு தயாரக இருந்த சுமார் 600 ஏக்கர்களுக்கு மேல் நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.
இதேபோல் மாவட்டம் முழுவதும் கனமழை காரணமாக நெற்பயிர்கள் மட்டுமின்றி வேர்கடலை, கரும்பு உள்ளிட்ட பயிர்களும் சேதமடைந்துள்ளன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை சேதம் குறித்து வேளாண்துறை கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. முறையாக கணக்கெடுப்பு நடத்தி விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்