சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மழை எதிரொலியாக அமைச்சர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி ஆணை பிறப்பித்துள்ளார். 


மழை எதிரொலியால் வருவாய்த்துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், மின்சாரத்துறை அமைச்சர் தங்கம்தென்னரசு, சென்னையைச் சேர்ந்த அமைச்சர்கள் சேகர்பாபு, மா சுப்பிரமணியன் உள்ளிட்டோரை சென்னையிலேயே இருந்து பணிகளை கண்காணிக்க முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார். 


இன்று கலைஞர் கோட்டம் திறப்பு விழா திருவாரூரில் நடைபெறுகிறது. கலைஞர் கோட்டத்தை பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திறந்து வைக்கிறார். அதனால் முதலமைச்சர் திருவாரூரில் இருக்கிறார். இந்நிலையில் முதலமைச்சர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். 


சென்னையில் மழை: 


நேற்று காலை முதல் லேசான மழை பெய்து வரும் நிலையில், சென்னை ஒரு மினி ஊட்டியாக மாறியுள்ளதாக மக்கள் தரப்பில் கூறப்படுகிறது. மீனம்பாக்கம், நங்கநல்லூர், ஆதம்பாக்கம், மடிப்பாக்கம், ஆலந்தூர், கிண்டி, சைதாப்பேட்டை, அடையாறு, பட்டினப்பாக்கம், அண்ணா சாலை, தேனாம்பேட்டை, புரசைவாக்கம், வேப்பேரி ஆகிய பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. கடலில் இருந்து மேகக்கூட்டங்கள் வருவதை ஒட்டி கடலோர மாவட்டங்களில் மழை பெய்து வருவதாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.


தொடர்ந்து மழை பெய்து வருவதால் சில பகுதிகளில் சாலையில் மழை நீர் தேங்கி உள்ளது. மழை நீரை அகற்றும் பணியில் மாநகராட்சி தரப்பில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இருப்பினும்  மடிப்பாக்கம், ராம் நகர், கார்த்திகேயப்புரம், திருவல்லிக்கேணி, சேப்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் சூழ்ந்துள்ளது. அதுமட்டுமின்றி சென்னையில் பல பகுதிகளில் பாதாள சாக்கடை, மெட்ரோ குடிநீர் பணிகள் மற்றும் மெட்ரோ ரயில் பணிகள் காரணமாக சாலைகள் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால சாலையில் நடந்து செல்பவர்கள், வாகன ஓட்டிகல் கடும் சிரமத்திற்கு மத்தியில் பயணம் மேற்கொண்டு வருகின்றனர்.


மழைநீர் அகற்றும் பணிகள், மழையால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை அமைச்சர்கள் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில், இன்று காலை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் சோழிங்கநல்லூர், விருகம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், “ கடந்த இரண்டு ஆண்டுகளாக மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அனைத்து துறைகளில் ஒருங்கிணைந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு மட்டும் 200 கிலோமீட்டர் புதிய மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது. பெரிய மழை வந்த போதிலும் சென்னையில் உள்ள சுரங்கங்களில் மழை நீர் தேங்காமல் இருந்தது. மழைநீர் வடிகால் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டதால் பாதிப்புகள் குறைந்தன.  மழையால் பாதிக்கப்பட்ட ஒருசில இடங்களிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என தெரிவித்தார். 


மேலும், மழை காரணமாக அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ். ராமசந்திரன், தங்கம் தென்னரசு, சேர்கர்பாபு உள்ளிட்டவர்களை சென்னையில் இருந்து தொடர்ந்து கண்காணித்து போதிய நடவடிக்கைகள் எடுக்க முதலமைச்சர் தரப்பில் தெரிவிகப்பட்டுள்ளதாக அமைச்சர் மா. சுப்பிரமணியன் கூறியுள்ளார்.