முதலமைச்சரின்‌ கவனத்தை ஈர்த்திடும்‌ வகையில்‌ இன்று (ஜனவரி 5)அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகங்களிலும்‌ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்‌ நடைபெறும்‌ என்று  ஜாக்டோ ஜியோ அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைச் செயலக சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. 


அக விலைப்படியைத் தொடர்ச்சியாக ஆறு மாத காலம்‌ தாழ்த்துவதோடு நிலுவைத்‌ தொகையினை மறுப்பது, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண்‌ விடுப்பு, மீண்டும்‌ பழைய ஓய்வூதியத்‌ திட்டத்தை‌ நடைமுறைப்படுத்துதல்‌ உள்ளிட்ட கோரிக்கைகள்‌ குறித்து முதலமைச்சர்‌ எந்தவித அறிவிப்பும்‌ வெளியிடாததால்‌ ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளதாக ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது. 


அக விலைப்படியினை மத்திய அரசு வழங்கிய தேதியில்‌ வழங்காமல்‌ தொடர்ச்சியாக ஆறு மாத காலம்‌ தாழ்த்துவதோடு நிலுவைத்‌ தொகையினை மறுப்பது, காலவரையின்றி முடக்கப்பட்டுள்ள சரண்‌ விடுப்பு, மீண்டும்‌ பழைய ஒய்வூதியத்‌ திட்டம்‌ நடைமுறைப்படுத்துதல்‌, இடைநிலை ஆசிரியர்கள்‌ மற்றும்‌ முதுநிலை ஆசிரியர்களின்‌ ஊதிய முரண்பாடுகளைக்‌ களைவது, தொகுப்பூதியம்‌- சிறப்பு காலமுறை ஊதியம்‌ மற்றும்‌ தினக் கூலியில்‌ பணியாற்றும்‌ ஆசிரியர்கள்‌, சத்துணவு, அங்கன்வாடி, எம்‌ஆர்பி செவிலியர்‌, வருவாய்‌ கிராம உதவியாளர்‌. ஊர்ப்புற நூலகர்‌, பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள்‌ ஆகியோருக்கு காலமுறை ஊதியம்‌ வழங்குவது, சாலைப்‌ பணியாளர்களின்‌ 41 மாத பணிநீக்கக்‌ காலத்தினை முறைப்படுத்துதல்‌, காலிப்‌ பணியிடங்களை உடனடியாக நிரப்புதல்‌, 21 மாத ஊதிய மாற்று நிலுவைத்‌ தொகையினை வழங்குதல்‌ உள்ளிட்ட கோரிக்கைகள்‌ குறித்து முதலமைச்சரிடம் ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் எடுத்துரைத்தனர்‌.


எனினும் இதற்குத் தீர்வு கிடைக்காததால், இன்று (ஜனவரி 5) முதலமைச்சரின்‌ கவனத்தை ஈர்த்திடும்‌ வகையில்‌ கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்‌ அனைத்து மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அலுவலகங்களிலும்‌ நடைபெற உள்ளது.


அடுத்த கட்ட இயக்க நடவடிக்கைகளைத்‌ திட்டமிடுவதற்காக ஏற்கனவே முடிவு செய்யப்பட்டவாறு, எதிர்வரும்‌ 8.1.2023 அன்று மதுரையில்‌ ஜாக்டோ ஜியோ உயர் மட்டக்‌ கூட்டம்‌ நடைபெற உள்ளது. பிற்பகல்‌ 2.00 மணிக்கு ஒருங்கிணைப்பாளர்‌ கூட்டமும்‌ அதனைத்‌ தொடர்ந்து 3.00 மணிக்கு உயர் மட்டக் குழுக்‌ கூட்டமும்‌ நடைபெறும்‌ என்று ஜாக்டோ ஜியோ தெரிவித்துள்ளது. 


இந்நிலையில், இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தலைமைச் செயலக சங்கம் ஆதரவு தெரிவித்துள்ளது. இதுகுறித்துத் தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத் தலைவர் வெங்கடேசன், செயலாளர் ஹரிசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ''கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டு இழந்ததை மீட்போம். இருப்பதைக் காப்போம்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனால் தமிழக அரசிடம் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் போராட்டம் தீவிரமடையும் நிலை உருவாகி உள்ளது.