மாற்றுத் திறனாளி மருத்துவர் பிரசாந்திக்கு முதல்வர் விஜய், மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து அரசுப் பணி நியமன ஆணையை வழங்கியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 

Continues below advertisement

தமிழ்நாடு சுகாதாரத் துறை சார்பில் இன்று 751 உதவி மருத்துவ அலுவலர்கள் மற்றும் 1,393 சுகாதார ஆய்வாளர்கள் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா மற்றும் ரூ.139.47 கோடி மதிப்பீட்டில் மருத்துவ கட்டடங்கள் மற்றும் நவீன உபகரணங்களை தொடங்கி வைத்தல் மற்றும் "நலம் TN" இணையதளம் தொடக்க விழா சென்னையில் நடைபெற்றது.

இதில் உதவி மருத்துவ அலுவலர்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் விஜய் வழங்கி, நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

Continues below advertisement

இதில் மாற்றுத் திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவராகத் தேர்வு செய்யப்பட்ட டாக்டர் பிரசாந்திக்கு முதல்வர் விஜய், மேடையில் இருந்து கீழே இறங்கி வந்து பணி நியமன ஆணையை வழங்கினார். எனினும் இவ்வாறு செய்ய வேண்டாம் என்று திமுக வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து திமுக மாற்றுத் திறனாளிகள் அணியின் மாநிலச் செயலாளர் பேராசிரியர் தீபக் நாதன் கூறும்போது, ’’தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு ஒரு சின்ன வேண்டுகோளை முன் வைக்க விரும்புகிறேன். மாற்றுத்திறனாளிகளால் ஏறி வர முடியாது! அவர்கள் சிரமப்படுவார்கள்! அதனால் நான் கீழே இறங்கி வருகிறேன் என்று சொல்லுவது பழமை வாதப் பார்வை.

ஒரு மாற்றுத் திறனாளி படித்து, மருத்துவராகி, பணியில் சேருகிறார் என்றால் அவர் பட்ட கஷ்டத்தை சிலாகித்து ஒரு இரண்டு வார்த்தைகள் பேசி, அவரிடம் மேடைக்கு வர வைக்க வேண்டும். அதற்கு முதலில் மேடையை அனைவரும் அணுகத்தக்கதாக மாற்றி, அவரை அங்கே வர வைத்து அனைவருக்கும் முன்பாக அவரைப் பாராட்டுவது தான் சரியான முறையாக இருக்கும்.

கழிவிரக்க பார்வை..

தவிர ’கீழே அவர் இருக்கின்ற இடத்திற்கு வந்து அவரைப் பாராட்டு செய்கிறேன், அவருக்கு பணி நியமனம் வணங்குகிறேன்’ என்பது கருணை பார்வையோடு மட்டுமல்லாமல், கழிவிரக்க பார்வையோடு நடத்துவதாகத் தான் அமையும் .

இந்த செயலை என்னால் அங்கீகரிக்க முடியாது. தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் ஆணையர் அலுவலகமும் , தமிழ்நாடு மாற்றுத் திறனாளிகள் துறையும் இதை முதலமைச்சர் பார்வைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்.

இல்லை என்றால் ஒரு ஆணையம் இருந்து ஒரு துறை இருந்து , அது அதனுடைய கடமையை தவறுகின்றது என்பதாகத்தான் அர்த்தப்படும்’’ என்று பேராசிரியர் தீபக் நாதன் தெரிவித்துள்ளார்.