தொழில் முதலீடுகளை ஈர்க்கும் பொருட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், ஜப்பான் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஜப்பானின் மிட்சுபிஷி எலக்ட்ரிக் கார்ப்பரேஷனின் துணை நிறுவனமான மிட்சுபிஷி எலக்ட்ரிக் இந்தியா பிரைவேட் லிமிடெட், மிட்சுபிஷி தயாரிப்புகளை உற்பத்தி செய்யும் தொழிற்சாலையை தமிழகத்தில் அமைக்க உள்ளது.
இந்த தொழிற்சாலை திருவள்ளூர் பெருவயல் கிராமத்தில் 52.4 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படுகிறது. மிட்சுபிஷி நிறுவனத்துடனான ஒப்பந்தத்தால் தமிழகத்திற்கு ரூ.1,800 கோடி முதலீடுகள் வர வாய்ப்பு உள்ளது. மேலும் ஏர் கண்டிஷனர் மற்றும் கம்ப்ரசர் தொழிற்சாலைக்கும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர், கடந்த ஆண்டில் நான் அதிகம் கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில், தொழில்துறை நிகழ்ச்சிகள்தான் அதிகம். அப்போதைய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவை சந்திக்கும்போதெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் நிலை, வேலைவாய்ப்பு குறித்தெல்லாம் கேட்டுக்கொண்டேயிருப்பேன். இதற்கிடையில் தொழில் முதலீட்டு குழுவிற்கு தலைமை தாங்கி சிங்கப்பூர்,ஜப்பான் சென்று தமிழ்நாட்டில் முதலீடுகளை மேற்கொள்ள அழைப்பு விடுக்க உள்ளேன் என தெரிவித்திருந்தார்.
மேலும் ஜப்பானியர்கள் அதிக அளவு தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகிறார்கள். அந்த உறவை மேலும் வலுப்படுத்த ஜப்பான் நாட்டு முன்னணி தொழில் நிறுவனங்களை சந்தித்து முதலீட்டாளர் மாநாட்டிற்கு அழைப்புவிடுக்க உள்ளேன். . பெண்களுக்கு அதிகளவில் வேலைவாய்ப்புகளை வழங்கும் நிறுவனங்களை வரவேற்கிறோம். உலகளவிலான முக்கிய நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறது” எனவும் முதலமைச்சர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் திட்டமிட்டபடி 2 நாள் பயணமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை (மே 23) தொழில்துறை அதிகாரிகளுடன் சிங்கப்பூர் செல்ல உள்ளார். அங்கு 24ஆம் தேதி நடைபெறும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் மாநாட்டில் அவர் கலந்து கொள்ள இருக்கிறார். இந்நிகழ்வில் சிங்கப்பூர் இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபை உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். முன்னதாக சிங்கப்பூரில் முன்னேற்பாடுகளை செய்ய தற்போதைய தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா நேற்று சிங்கப்பூர் சென்றார்.
இதன்பின்னர் சிங்கப்பூர் பயணத்தை முடித்துக்கொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜப்பான் செல்கிறார். தலைநகர் டோக்கியோவுக்கு பயணம் மேற்கொள்ளும் அவர் அங்கும் தொழில் முதலீட்டாளர்களை சந்தித்து தமிழ்நாட்டில் தொழில் தொடங்க அழைப்பு விடுக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.