படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு நேரில் சென்ற முதல்வர் ஸ்டாலின் அவரின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங்கை கடந்த 5ஆம் தேதி, சென்னை பெரம்பூர் பகுதியில் 6 பேர் கொண்ட கும்பல் வெட்டியது. 3 இருசக்கர வாகனத்தில் வந்த 6 மர்ம நபர்கள் ஆம்ஸ்டிராங்கை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியோடினர்.


பலத்த காயமடைந்த ஆம்ஸ்டிராங், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தமிழ்நாட்டின் தலைநகரில் தனது வீட்டின் முன்னாலேயே ஒரு கட்சியின் மாநிலத் தலைவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.


ஆற்காடு சுரேஷ் கொலைக்குப் பழிக்குப் பழியா?


இதுதொடர்பாக 8 பேர் சரணடைந்த நிலையில், மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டனர். ஆற்காடு சுரேஷ் என்பவரின் கொலை வழக்கில் பழிக்குப் பழி வாங்கவே இந்தக் கொலை நிகழ்த்தப்பட்டதாகத் தகவல் வெளியானது. இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன் ஆகியோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். விசிக தலைவர் திருமாவளவன், பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதி உள்ளிட்டோரும் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். 


முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆறுதல்


தொடர்ந்து ஆம்ஸ்ட்ராங்கின் உடல் பொத்தூரில் அடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அயனாவரத்தில் உள்ள ஆம்ஸ்ட்ராங் இல்லத்துக்கு முதல்வர் ஸ்டாலின் இன்று நேரில் சென்றார். ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கும் குடும்பத்தினருக்கும் ஆறுதல் தெரிவித்த அவர், மறைந்த ஆர்ம்ஸ்ட்ராங்கின் உருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.


அப்போது பொற்கொடியிடம், ‘’குற்றம் செய்தவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, சட்டத்துக்கு முன் நிறுத்தப்படுவார்கள்’’ என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.


தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு நோட்டீஸ்


இதற்கிடையே ஆம்ஸ்ட்ராங் படுகொலை குறித்து தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம், தமிழக அரசு மற்றும் டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.