அதற்கு அவர் கையில் எடுத்தது பெண்களுக்கு சொத்துரிமை கொடுப்பது. 1929-ம் ஆண்டு செங்கல்பட்டு மாநாட்டில் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு அளிக்க வேண்டும் என்று இந்தியாவிலேயே முதன்முதலில் தீர்மானம் நிறைவேற்றினார் தந்தை பெரியார். ஆனால் அது சட்டமாக்கப்படாமல் அப்படியே இருந்தது. திராவிட இயக்கத்தின் நெடுநாள் போராட்டம் அது. தந்தையின் சொத்தில் ஆண் வாரிசுகளுக்கு மட்டுமே உரிமை உண்டு என்பதை அடியோடு மாற்றி பெண் வாரிசுகளுக்கும் சம உரிமை கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு சட்ட அங்கீகாரம் கொடுத்தார். இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத முன்னோடி நடவடிக்கை இது.
பெண்கள் முன்னேற்றத்திற்கான திமுகவின் திட்டங்களில் ஒரு துளி இது. இது மட்டுமல்லாமல், காவல்நிலையங்களில் பெண்களை பணியமர்த்தியது, அரசுப்பணியில் இடஒதுக்கீடு, கைம்பெண் மறுமண உதவித்திட்டம், மகப்பேறு உதவித்திட்டம், சுய உதவிக்குழுத்திட்டம், இலவச எரிவாயு அடுப்பு வழங்கியது என்று கலைஞர் கருணாநிதி முதல்வராக இருந்த சமயத்தில் பெண்கள் நலனுக்காகக் கொண்டுவரப்பட்ட திட்டங்களை பட்டியலிட்டுக்கொண்டே செல்லலாம். பெண்களின் முன்னேற்றம் என்பது திமுகவின் அடிப்படைகளில் ஒன்று. அதற்காகத்தான் தேர்தல் அறிக்கைகளில் கூட மகளிர் மேம்பாடு என்ற ஒரு பிரிவிலே அறிவிப்புகளை வெளியிடுவார்கள். கலைஞர் கருணாநிதியைப் போலவே தான் 10 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைப் பிடித்திருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு.
கருணாநிதி தலைமையிலான திமுக ஆட்சியில் பெண்கள் முன்னேற்றத்தில் எப்படி கவனம் செலுத்தப்பட்டதோ, அதே போல ஸ்டாலினும் பெண்கள் முன்னேற்றத்தில் கவனம் செலுத்தி வருகிறார். முதலமைச்சரானது பிறகுதான் என்றில்லை, துணை முதலமைச்சராக இருந்த போதே பல விஷயங்களை செய்திருக்கிறார். அதில் முக்கியமானது சுய உதவிக்குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கியது. பெண்கள் யாருடைய தயவையும் எதிர்பார்க்காமல் அவரவர்கள் சொந்தக் காலிலே நிற்கவேண்டும். அவர்களுக்கு தன்மானத்தோடு வாழக்கூடிய அளவிற்கு தன்னம்பிக்கையை தந்தாக வேண்டும் என்ற அடிப்படையில்தான் கலைஞர் கருணாநிதி சுய உதவிக் குழுவைத் தொடங்கி வைத்தார். ஆனால், சுய உதவிக்குழுவை பட்டிதொட்டியெங்கும் கொண்டு சென்றது ஸ்டாலின் தான்.
இந்தியாவிலேயே முதன்முதலாக மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்குவதற்கான இலக்கு நிர்ணயம் செய்யும் முறை ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த 2007 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டம் கடந்த ஆட்சியில் கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டது. அதை மீண்டும் செயல்படுத்த, கடந்த திமுக ஆட்சியில் திறம்பட பணியாற்றி நற்பெயர் எடுத்திருந்த, பிரதமர் அலுவலக பணியில் இருந்த அமுதா ஐஏஎஸ்-ஐ தமிழகப்பணிக்கு கொண்டுவந்து அவர் மூலம் இத்திட்டத்தை செயல்படுத்துகிறார் ஸ்டாலின். அந்த அடிப்படையில் இதுவரை ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 13 கோடி ரூபாய் வங்கிக் கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 7.22 லட்சம் மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டு அதில் ஒரு கோடியே 6 லட்சத்து 68 ஆயிரம் மகளிர் உறுப்பினராக இடம்பெற்றிருக்கிறார்கள்.
2021ம் ஆண்டு தேர்தல் அறிக்கையில் பல்வேறு திட்டங்களை பட்டியலிட்டிருந்தது திமுக. அதில் முதல் திட்டம், அரசுப்பணிகளுக்குச் செல்லும் பெண்களுக்கு வழங்கப்பட்டுவரும் 9 மாத பேறு கால விடுமுறையை 12 மாதங்களாக உயர்த்தி வழங்குவது. இதை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்திலேயே நிறைவேற்றி அரசாணையும் வெளியிடப்பட்டது. அரசு வேலை வாய்ப்புகளில் பெண்களுக்கு 40 சதவீத இட ஒதுக்கீடு என்ற அறிவிப்பை கடந்த ஆண்டு பட்ஜெட்டிலேயே அறிவிக்கப்பட்டது.
அது மட்டுமல்லாமல் தமிழ்நாடு மாநில புதிய மகளிர் கொள்கை உருவாக்கப்படும் என்றும், கைம்பெண்கள் உள்ளிட்டோர் சமூகத்தில் பாதுகாப்புடன் சிறப்பான முறையில் வாழ்வதற்காக “கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற மகளிர் நல வாரியம்” அமைக்கப்படும் என்றும் கடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அறிவித்திருக்கிறது திமுக அரசு. அதோடு, தேர்தல் அறிக்கையில் சொல்லபட்டது போல மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்பட்டு நிலுவையில் இருந்த கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பின்படி ரூ 2756 கோடி கடனை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார் ஸ்டாலின். அதுமட்டுமல்லாமல், கூட்டுறவு வங்கிகளில் 5 கிராமிற்கு உட்பட்ட அடகு வைக்கப்பட்ட நகைக்கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்திருந்தார். அதே போல ஆட்சிக்கு வந்ததும் அது குறித்து கணக்கெடுக்கப்பட்டு ரூபாய் 6000 கோடி மதிப்பிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. இந்த அறிவிப்பால் சுமார் 16 லட்சம் பேர் பயன்பெற்றனர்.
இவற்றிற்கெல்லாம் மேலாக, ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளா்ச்சிக்குப் பெண்களின் பங்களிப்பு இன்றியமையாததாகும். இதற்காக தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூா்ப் பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டது. அந்த வாக்குறுதியையும் நிறைவேற்றியிருக்கிறார் ஸ்டாலின். இந்தியாவிலே ஒரு மாநிலத்தில் இப்படி ஒரு திட்டம் செயல்படுத்தப்படுவது இதுவே முதல்முறை. இந்த திட்டம் தான் அனைத்துத் தரப்புப் பெண்களையும் ஸ்டாலினின் பக்கம் ஈர்த்தது. இந்த அறிவிப்பால் மாதந்தோறும் சுமார் 500 முதல் ஆயிரம் ரூபாய் வரை சேமிக்க முடியும் என்று மகிழ்ச்சி தெரிவிக்கின்றனர் பெண்கள்.
நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் திமுக பெரும்பான்மை இடங்களைப் பெற இந்த திட்டமும் ஒரு காரணம் என்று கூறுகின்றனர் திமுகவினர். அதற்கடுத்ததாக குடும்பத்தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் திட்டம் எப்போது செயல்படுத்தப்படும் என்ற கேள்வி எழுந்த வண்ணம் இருக்கிறது. அந்த திட்டமும் மிக விரைவில் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார் ஸ்டாலின். சொன்னது போன்றே அந்த திட்டமும் நிறைவேற்றப்பட்டால், பெண்கள் முன்னேற்றத்தை அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமாக அமையும்.
இவைகள் எல்லாம் சொன்னதை செய்தவைகள். செய்யாதவைகள் இன்னும் இருக்கின்றன. சொன்னதைச் செய்வோம். செய்வதைத்தான் சொல்வோம் இது தான் திமுகவின் கொள்கை. செய்யப்படாதவைகள் படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்திருக்கிறார். சொன்னதை செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது. பார்ப்போம்.