முக்கடல் சந்தியில் திருவள்ளுவர்:


இந்தியாவின் தென்முனையாக , தமிழ்நாட்டின் கன்னியாகுமரி நிலபரப்பு இருக்கிறது. அங்கு முக்கடலான வங்காள விரிகுடா , இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக் கடல் ஆகிய மூன்று கடல் சந்திக்கும் பகுதியாக இருக்கிறது. 


இங்கு, தமிழின் முப்பால் என்றும் உலகப் பொதுமறை என்றும் கருதப்படுகிற திருக்குறளை இயற்றிய திருவள்ளுவருக்கு,  சிலை அமைக்கப்பட்டுள்ளது. அதாவது, திருக்குறளில் உள்ள 133 அதிகாரங்கள் அடிப்படையில், 133 அடி உயர அடிப்படையில் சிலை அமைக்கப்பட்டு , சிறப்பிக்கப்பட்டுள்ளது. 


இந்நிலையில், சிலை அமையப்பெற்று , 25 ஆண்டுகள் ஆகிய நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். 


முதலமைச்சர் ஸ்டாலின்:


இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்ததாவது, “  சமத்துவம் போற்றும் உலகப் பொதுமறை படைத்த அய்யன் வள்ளுவருக்கு, நமது நாடு தொடங்கும் குமரி எல்லையில் வானுயரச் சிலை அமைத்து ஆண்டுகள் ஆகிறது 25!, 


மூப்பிலாத் தமிழில் முப்பால் படைத்த அய்யன் திருவள்ளுவருக்கு முத்தமிழ் வித்தகர் கலைஞர் அமைத்த சிலையை #StatueOfWisdom-ஆகக் கொண்டாடுவோம்”  என  முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்




 






திருக்குறள் இலக்கியமானது, தமிழ் மொழியில் இயற்றப்பட்டாலும் , அதன் சிறப்புகளால் பல்வேறு அயல்நாட்டு மொழிகளில், மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கதாக கருதப்படுவது, 19 நூற்றாண்டில் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்ட ஜி.யூ.போப்பின் படைப்பாகும். திருக்குறளின் சிறப்புகளை அறிந்த அயல்நாட்டவர்களும், திருக்குறளை வாசித்து பயன்பெற தொடங்கினர்.


அதன் காரணமாகவே, திருக்குறளை உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது. திருக்குறளில் மனித பண்புகள், வாழ்க்கை நெறிகள் மட்டுமன்றி ; அரசு எப்படி இருக்க வேண்டும் என்றும் நெறிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கன்னியாகுமரி முக்கடல் சந்திப்பில் உள்ள திருவள்ளுவர் சிலை அமையப்பெற்று, 25 ஆண்டுகள் நிறைவுப்பெற்ற நிலையில், அதை சிறப்பிக்கும் விதமாக #StatueOfWisdom ஆக கொண்டாடுவோம் என தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.