டெல்லி ராஷ்டிரபதி பவனில் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ’Multiple Facets Of My Madurai’ என்ற நூலை பரிசாக அளித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தினை முதல்வர் ஸ்டாலின் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள நிலையில், இதைவிட மதுரைக்கு வேறு என்ன பெருமை வேண்டும் என மதுரை எம்.பியும் சாகித்திய அகாடமி விருது வென்ற எழுத்தாளருமான சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
’Multiple Facets Of My Madurai’ எவ்வுளவு கவனம் பெற்றதோ அதே அளவிளான கவனம் இப்புத்தகத்தை வரைந்து எழுதிய மனோகர் தேவதாஸ் மீதும் விழுந்துள்ளது. 1936ஆம் ஆண்டு மதுரையில் பிறந்த மனோகர் தேவதாஸ், கோட்டுச்சித்தர ஓவியங்களை வரைவதில் சிறுவயதில் இருந்தே ஆர்வம் கொண்டிருந்தார்.
மனோகர் தேவதாஸுக்கு இரண்டரை வயது இருந்தபோது சென்னை உயிரியல் பூங்காவில் ஒட்டகச்சிவிங்கியின் படத்தை தனது பென்சிலின் மூலம் வரைந்ததே அவரது முதல் ஓவியமாக இருந்தது. பின்னர், மதுரையில் தனது வீட்டின் அருகில் ஈச்சமரங்களை வரைந்து பழகத் தொடங்கிய மனோகர் தேவதாஸ், பள்ளி காலங்களில் பவுண்டன் பேனாக்களை கொண்டு மதுரையின் புராதன சின்னங்களையும் வரையத் தொடங்கினார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கோபுரங்கள், நாயக்கர் மஹால், மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம், உள்ளிட்ட மதுரையில் உள்ள புராதன சின்னங்களையும், வைக்கோல்களை கொண்டு செல்லும் மாட்டு வண்டி உள்ளிட்ட மதுரையை சுற்றியுள்ள பகுதி மக்களின் வாழ்வியலையும் கோட்டு சித்திரங்களாக பதிவு செய்யத் தொடங்கினார்.
தன் ஓவியத்திற்காக யாரிடமும் பாடம் கற்காமல் தனது ஆர்வத்தின் மூலம் மட்டுமே ஓவியக்கலையை கற்ற அவருக்கு ’ரெண்டின் நைட்டின்ஸ் சிக்மண்டோஸாஸ்’ என்ற கண் குறைபாடு காரணமாக தனது வலது கண்ணின் பார்வையை தனது 31ஆவது வயதில் முழுமையாக இழந்தார். மற்றொரு கண்ணும் நாளுக்கு நாள் பாதிக்கத் தொடங்கியதால் அவருக்கு எல்லா பொருளுமே நாணயம் அளவிற்குதான் தெரியும், பகல் வெளிச்சத்தில் பார்க்க முடியாத சூழலில் இரவில் ஒளிவிளக்குகளை கொண்டு வரையப்படும் படத்தை கொண்டு 20 மடங்கு படத்தை டெலஸ்கோப் மூலம் பெரிதாக்கி இன்னும் வரைந்து கொண்டு இருக்கிறார்.
தனக்கு மற்றொரு கண்ணின் பார்வையும் மெல்ல மங்கத் தொடங்குவதை மனோகர் தேவதாஸ் உணர்ந்தபோது அவரது மனைவி கார் விபத்தில் பாதிக்கப்பட்டார். அந்த விபத்தால், மனைவி மஹிமாவுக்கு கழுத்து பகுதியை தவிர உடலின் மற்ற பாகங்கள் இயங்க முடியாமல் போனது. இதனால் சக்கர நாற்காலியின் துணை கொண்டே மஹிமா இயங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. காலம் ஒரே நேரத்தில் இருவரையும் சோதித்தது.
இந்த நிலையில், 1976ஆம் ஆண்டு முதல் மனோகர் தேவதாஸ், படம் வரைய தொடங்கிய போது அவரின் அருகில் அமர்ந்து சத்தமாக புத்தகம் வாசிப்பதை அவரது மனைவி மஹிமா வழக்கமாக்கி கொண்டார். ஒரு கண்ணில் குறைந்த பார்வையை கொண்டு கோட்டுச் சித்திரங்களை மனோகர் தேவதாஸ் வரைந்த போதிலும் அதன் தரமும் வரையும் படங்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வந்தது. இந்த படங்களினால் கிடைக்கும் வருமானத்தையும், தனது மனைவி மஹிமா ஸ்போக்கன் இங்கிலீஷ் வகுப்பை நடத்துவதன் மூலம் கிடைக்கும் வருவாயையும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கும், அறக்கட்டளைகளுக்கும் அர்ப்பணித்தனர் இந்த தம்பதிகள்.
மதுரையில் தனது வாழ்கையில் நடந்த அனுபவங்களையும், தான் வரைந்த ஓவியங்களையும் இணைத்து மனோகர் தேவதாஸ் எழுதிய நூல்கள் மிகுந்த வரவேற்பை பெற்றன. The Green Well years, Multiple Facets of My Madurai, எனது மதுரை நினைவுகள், நிறங்களின் மொழி கனவுகள், பருவங்கள் மற்றும் வாக்குறுதிகள், தைரியத்துக்கு ஒரு கவிதை, பட்டாம்பூச்சியும் மஹிமாவும் போன்ற அவரது நூல்கள் மக்கள் மத்தியில் வெகுவாக கொண்டாடப்படுகின்றன. கண் இருந்தும் குருடர்களாய் பலர் இவ்வுலகில் வாழ்ந்து வரும் நிலையில் பார்வை குறைபாடுகளை கடந்து பலரின் கலை கண்களை தனது கோட்டுச் சித்திரங்களை கொண்டு திறந்த மனோகர் தேவதாஸுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தது இந்திய அரசு.
தற்போது அவர் எழுதிய ’Multiple Facets Of My Madurai’ என்ற நூலை தான் இந்தியாவின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவரிடம் கொடுத்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.