பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் 300 க்கும் மேற்பட்டோர் உளவு பார்க்கப்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. உளவு பார்க்கப்பட்டவர்களில் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான திருமுருகன் காந்தியும் ஒருவர். இதுகுறித்து அவர் ஏபிபி நாடு டிஜிட்டலுக்கு அளித்த பேட்டியை பார்க்கலாம்.


கேள்வி : பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தை எப்படி பார்க்கிறீர்கள்?


பதில் : “இஸ்ரேல் நாட்டின் பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் செல்போனில் இருந்து பல தகவல்களை எடுக்க முடியும். பேச்சுக்களை ஒட்டு கேட்க முடியும். செல்போனை நாம் இயக்காத சமயத்திலும் இயக்க முடியும். வீடியோ கேமராவை இயக்கி சுற்றி நடப்பதை கண்காணிக்க முடியும். மைக்ரோபோனை செயல்படுத்த வைத்து பேச்சுகளை ஒட்டு கேட்க முடியும். நமக்கு தெரியாமல் பொய்யான தகவல்களை இமெயில் அல்லது போனில் பதிவு செய்து, அதனை சாட்சியாக வைத்து கைது செய்ய வேண்டும். அவ்வாறு ஏற்கனவே பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் ஹேக் செய்து, ரோனா வில்சனை பாஜக அரசே பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளது. பொய்யான விஷயங்களை செய்ய இந்த சாப்ட்வேர் பயன்படுத்தப்படுகிறது. இந்த சாப்ட்வேர் அரசிற்கு மட்டும் விற்பனை செய்யப்படும். அதன் மூலம் பாஜக அரசு உளவு பார்த்து வருகிறது.”


கேள்வி : உங்களை உளவு பார்க்க என்ன காரணம்?


பதில் : ”தமிழ்நாட்டில் தமிழ்தேசிய உரிமை சார்ந்து தந்தை பெரியார் வழியில், அம்பேத்கர் அரசியலையும் முன்னெடுத்து செல்வதும் காரணம். தமிழீழ விடுதலைக்கான ஆதரவும், இனப் படுகொலை நீதிக்கான போராட்டம், மக்கள் உரிமைக்கான போராட்டங்களில் பங்கெடுப்பதும் காரணம். ஸ்டேர்லைட், கூடங்குளம், மீத்தேன் எதிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்து வருகிறோம். அதனால் எங்களை முடக்கும் முயற்சியாக உளவு பார்க்கப்பட்டுள்ளது”


கேள்வி : 40 பத்திரிகையாளர்கள் உளவு பார்க்கப்பட்டதை எப்படி பார்க்கிறீர்கள்?


பதில் : “பாஜக ஆட்சிக்கு வந்த நாளிலிருந்து ஊடகத்தை முடக்க வேண்டுமென திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் 40 பத்திரிகையாளர்களை உளவு பார்த்து முடக்கம் முயற்சித்துள்ளனர். ஊடகங்களை வளைக்க வேண்டுமென விரும்புகிறார்கள். பாஜக மாநிலத் தலைவர் 6 மாதத்தில் ஊடகங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் எனச் சொன்னது ஜனநாயக விரோத தன்மை.”




கேள்வி : பாஜக மாநிலத் தலைவர் அண்னாமலை ஊடகங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் என்பதற்கும், உளவு பார்க்கப்பட்டுள்ளதற்கும் தொடர்பு உள்ளதா?


பதில் : ”6 மாதத்தில் ஊடகங்களை கட்டுப்பாட்டில் கொண்டு வருவோம் என்கிறார். ஆனால் அதனை 7 ஆண்டுகளாக செய்து வருகிறார்கள். இது அப்பட்டமான ஜனநாயக விரோத செயல். இவர் எப்படி அரசியல் சாசனத்தை பாதுகாப்பார்? பாஜக தலைவராக இருக்க அவருக்கு என்ன தகுதி இருக்கிறது? ஜனநாயகத்தை பாதுகாக்க முடியாதவர்கள் எதற்காக தேர்தலில் போட்டியிடுகிறார்கள்? இதுபோன்ற எதேச்சை அதிகார போக்கு பாஜகவில் இருக்கிறது. அதனால் உளவு பார்ப்பது நடந்து இருக்கிறது.”


கேள்வி : சாதாரண செயலிகள் மூலமாகவே உளவு பார்க்க முடியுமே?


பதில் : “சாதாரண செயலிகள் மூலம் உளவு பார்ப்பதற்கும், பெகாசஸ் சாப்ட்வேர் மூலம் உளவு பார்ப்பதற்கும் பல வித்தியாசங்கள் உள்ளது. செல்போனை பயன்படுத்தாத போதும் கேமரா, மொபைல், மைக்ரோபோன் இயக்க முடியும். வீடியோ ஆன் பண்ணி சுற்றி என்ன இருக்கிறது, எங்கே இருக்கிறோம் என்பதை கண்காணிக்க முடியும். மற்றதில் பண்ண முடியாது.”


கேள்வி : இந்த விவகாரத்தில் இந்தியாவை அவமானப்படுத்த முயல்வதாக பாஜக ஆதரவாளர்கள் கூறுகிறார்களே?


பதில் : “மோடி அரசை கஷ்டப்பட்டு அவமானப்படுத்த வேண்டியதில்லை. மோடி அரசு கொரோனாவை எப்படி கையாண்டது என்பதை சர்வதேசம் பார்த்துக் கொண்டிருக்கிறது. மோடி அரசை அவமானப்படுத்த தனியாக ஒரு வேலையாக செய்ய வேண்டியதில்லை. அவர் செய்யும் எல்லா வேலைகளும், அம்பலப்படுத்தும் வேலை தான். மோடியை எதிர்த்து கேள்வி கேட்டால், தேசத்தை எதிர்த்து கேள்வி கேட்பதாக நினைக்கிறார்கள். மோடி தான் தேசம், பாஜக தான் இந்தியா என்ற கனவில் இருந்து பாஜகவினர் வெளியே வர வேண்டும். இந்தியாவை மொத்தமாக வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டு கம்பெனிகளுக்கும் காட்டி கொடுத்து விற்பனை செய்து வரும் பாஜக செயலை உலகமே பார்த்துக் கொண்டிருக்கிறது.”


கேள்வி : இந்த விவகாரத்தில் உங்களது அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?


பதில் : “உளவு பார்க்கப்பட்ட விவகாரத்தில் சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மே 17 இயக்கம் மேற்கொள்ளும். பிற ஜனநாயக அமைப்புகளுடன் இணைந்து அடுத்த கட்ட செயல்பாடுகளை முன்னெடுப்போம்.”


கேள்வி : உளவு விவகாரம் உங்களது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலா?


பதில் : “உளவு பார்க்கப்படுவது தனி நபர் பாதுகாப்பிற்கு கேள்விக்குறி தான். எந்த இடத்தில் இருக்கிறேன் என்பதை கண்காணிக்க முடியும். யார் கண்காணிக்கிறார்கள் என்பது தெரியாது. எனவே இது எனக்கும், என்னை சுற்றி இருப்பவர்களும் பாதுகாப்பு அச்சுறுத்தல்.”


கேள்வி : அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலில் எதிர்கட்சிகளை முடக்க வேண்டுமென உளவு பார்ப்பதாக புகார்களை எப்படி பார்க்கிறீர்கள்?


பதில் : “2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறாது. அதை தெரிந்து தான் இந்த நகர்வுகளின் மூலம், எதிர்கட்சிகளை முடக்கும் வேலையை செய்கிறது. இதனை மீறி மக்கள் விரட்டியடிப்பார்கள்.”