சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, பொதுத்துறை செயலாளர் ஜெகன்நாதன் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.



 


இந்த சந்திப்பு குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் திராவிட முன்னேற்றக்கழக தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு ஆளுநர் உரை நிகழ்த்தும் முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆளுநர் மாளிகையில் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து கலந்தாலோசித்ததாகவும், இந்த சந்திப்பின்போது தமிழக அரசு மேற்கொண்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சரிடம் கேட்டறிந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையெடுத்து வரும் ஜூன் 21ஆம் தேதி திங்கள் கிழமை காலை 10 மணிக்கு சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தொட்டம், கலைவாணர் அரங்கத்தில் உள்ள முன்றாவது தளத்தில் நடைபெறும் சட்டப்பேரவை கூட்டத்தில் ஆளுநர் உரை நிகழ்த்த உள்ளதாக சட்டபேரவை செயலாளர் கி.சீனிவாசன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்



ஆளுநர் உரைக்கு பிறகு நடைபெறும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் அனைத்து சட்டமன்ற கட்சி உறுப்பினர்களுடன் ஆலோசித்து ஆளுநர் உரை மீதான விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை சபாநாயகர் அறிவிப்பார். மேலும் ஆளுநர் உரை முடிந்த உடன் வரும் ஜூலை மாதத்திலேயே பட்ஜெட் கூட்டத்தொடரை நடத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன