தருமபுரியில் விதைத்தால் தமிழகம் முழுவதும் விளையும் என, மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகைக்கான  பதிவை  தொடங்கி வைத்த பின்பு முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.


பதிவு தொடக்கம்:


மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்திற்கான பதிவை முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.தருமபுரி மாவட்டத்தில் உள்ள தொப்பூர் எனும் பகுதியில் அமைந்துள்ள முகாம்கிற்கு நேரில் சென்ற முதலமைச்சர், பயனாளர்களுக்கான பதிவை தொடங்கி வைத்தார்.


ஸ்டாலின் பெருமிதம்:


தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “மகளிர் சுய உதவிக்குழுக்கள் தொடங்கப்பட்ட தருமபுரியில் மகளிர் உரிமை தொகை திட்டமும் தொடங்கப்பட்டுள்ளது. அன்று முதலமைச்சர் கருணாநிதி விதைத்த விதை தான் இன்று மாபெரும் திட்டமாக தமிழ்நாடு எங்கும் தழைத்து வளர்ந்து லட்சக்கணக்கான பெண்களுடைய வாழ்க்கையில் அது ஒளியை ஏற்றிக்கொண்டுள்ளது. மாநிலம் முழுவதும் இன்று கணக்கெடுத்து பார்த்தால் 4 லட்சத்து 57 ஆயிரம் மகளிர் சுய உதவிக்குழுக்கள் உள்ளன. அதில் 51 லட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்றுள்ளனர். அப்படிபட்ட சிறப்பான மகளிர் சுய உதவிக்குழு எனும் திட்டத்திற்கு விதைபோட்ட மண் தான் தருமபுரி மண் என்பதை நினைத்து பெருமைகொள்கிறேன். தருமபுரியில் விதைத்தால் அது தமிழகம் முழுவதும் முளைக்கும் என்ற நம்பிக்கையில் தான், கலைஞர் உரிமைத்தொகை திட்டத்தையும் இங்கு தொடங்கி வைக்கிறேன். முதலமைச்சராக பொறுப்பேற்றபின் நான் முன்னெடுத்த திட்டங்கள் அனைத்தும் தற்போது நாள்தோறும் நடைபெற்று வருகின்றன. கடும் நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் மகளிருக்கு இலவச பேருந்து பயணம் உள்ளிட்ட பல திட்டங்களை செயல்படுத்தினோம். 


காலை உணவு திட்டம்:


நீதிக்கட்சியால் தொடங்கப்பட்ட மதிய உணவு திட்டம் காமராஜரால் விரிவுபடுத்தப்பட்டது. எம்.ஜி.ஆரால் அது மேம்படுத்தப்பட்டு கருணாநிதியால் சத்துணவு திட்டமாக மாற்றப்பட்டது. அதன் தொடர்ச்சியாக தான் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. காலையில் பள்ளிக்கு வரும் பிள்ளைகள், பசியோடு வருவார்கள். பசியோடு வந்தால், படிக்க முடியாது என்பதால், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் முதற்கட்டமாக 2 லட்சம் பாண்டவர்களுக்கு தொடங்கப்பட்டது. தற்போது மேலும் விரிவுப்படுத்தி 18 லட்சம் மாணவர்களுக்கு காலை உணவு திட்டம் வழங்கப்படும்.


ரூ.12 ஆயிரம் கோடி:


பெண்களுக்கு சொத்தில் பங்கு உண்டு என பெண்களுக்கு உரிமையை பெற்று தந்தவர் கலைஞர். எனவே தான் பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டத்திற்கு கலைஞரின் பெயரை வைத்துள்ளேன். எல்லா பணிகளிலும் பெண்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இந்த திட்டம் போய் சேர வேண்டும். வருகிற செப்டம்பர் 15- ம் தேதி அண்ணா பிறந்தநாள் முதல் மாதந்தோறும் வங்கி கணக்கில் செலுத்தப்படும். இதில் எந்த தவறும் நடைபெறாது. இந்த நிதி ஆண்டில் ரூ.7000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.  அடுத்த நிதி ஆண்டில் ரூ.12000 கோடி நிதி ஒதுக்கப்படும்.


தகுதியானவர்களுக்கு ரூ.1000:


நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடனே, அரசியல் கட்சியினர் திமுக பொய்யான வாக்குறுதிகளை அளித்தனர். இதை கொடுக்க முடியாது என விமர்சனம் செய்தனர். ஆனால் நான் ஆட்சி பொறுப்பேற்றவுடன் கடுமையான நிதி நெருக்கடி இருந்தது. தற்போது அதனை சரி செய்து, தற்போது வழங்க போகிறோம். யார் யாருக்கெல்லாம் கிடைக்கும் என சட்டமன்றந்தில் கேட்டார்கள். யாருக்கெல்லாம் 1000 தேவைப்படுகிறதோ, அவர்களுக்கெல்லாம் கிடைக்கும் என அழுத்தமாக சொன்னேன். மகளிர் வாழ்வாதாரத்தை பெருக்க துணை நிற்பது தான் திராவிட மாடல் ஆட்சியின் நோக்கும். எல்லார்க்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல் ஆட்சி


உரிமைத்தொகை:


இது அரசு வழங்குகின்ற. தொகையாக பார்க்கக் கூடாது, இது உங்களுக்கான உரிமைத் தொகை. இனி ஆண்டுக்கு ரூ.12,000 கிடைக்கும். பெண்களின் வசதிக்காக விடுமுறை நாட்களிலும் முகாம் நடத்தப்படும். உங்கள் குடும்ப அட்டைக்காக ஒதுக்கப்பட்ட தேதிக்கு வந்தால் போதும், தேவையற்ற கூட்ட நெரிசல் ஏற்படாத வகையில் வசதி செய்யப்பட்டுள்ளது. விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டவுடன், உங்கள் செல்போனிற்கு குறுந்தகவல் வந்துவிடும்‌. இந்த முகாம் வரும் ஆகஸ்ட் 28-ம் தேதி வரை நடைபெறும்” என முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.