தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.


மாவட்ட செயலாளர்கள் கூட்டம்:


தேமுதிக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சென்னை, கோயம்பேட்டில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.  அதன்படி, கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், காலை 10 மணிக்கு நடைபெறவுள்ள இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி, கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்கப்பட்டு முக்கிய முடிவுகள் எட்டப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


அனல் பறக்கும் தேர்தல் கூட்டணி:


அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் முடுக்கிவிட்டுள்ளன. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் அண்மையில், 38 கட்சிகள் கலந்துகொண்ட ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. அதில் பிரதமர் மோடியும் பங்கேற்றார். மறுமுனையில் பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தில் எதிர்கட்சிகள் இணைந்துள்ளன. பெங்களூருவில் கடந்த வாரம் நடைபெற்ற இந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் அந்த கூட்டணிக்கு இந்தியா என பெயர் சூட்டப்பட்டது. நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் கட்சிகள், இந்த இரண்டு கூட்டணிகளில் ஏதோ ஒன்றில் இடம்பெறுவதை உறுதி செய்துள்ளன.


யார் உடன் கூட்டணி?


இதனிடையே, கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலின் போது, ஒரே நேரத்தில் திமுக மற்றும் அதிமுக என இரண்டு கட்சிகள் உடனும் தேமுதிக நிர்வாகிகள் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதுதொடர்பான செய்திகள் வெளியாகி அந்த கட்சிக்கு பெரும் பின்னடைவாக மாறியது. இந்நிலையில் தான், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மற்றும் எதிர்கட்சிகளின் இந்திய கூட்டணி என எந்தவொரு கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்திற்கும் விஜயகாந்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.  இந்த சூழலில் இன்று நடைபெறும் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலில் அடுத்த கட்ட பணி, யாருடன் கூட்டணி வைப்பது என்பது தொடர்பாக, மாவட்ட செயலாளர்களிடம் கருத்து கேட்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதனடிப்படையில் உயர்மட்ட ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன்பிறகு கூட்டணி இறுதி செய்யப்படும் எனவும் தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


நிர்வாகிகள் நியமனம்?


கட்சியின் உட்கட்சித் தேர்தல்கள் முடிந்துவிட்டதாகவும், விரைவில் கட்சியின் பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களை கட்சியின் தலைமையகம் அறிவிக்கும் என்றும் பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்தார். இதையடுத்து, இன்று நடைபெறும் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில், பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் நியமனம் தொடர்பாகவும் விவாதிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.