திருப்பத்தூரில் உயிரிழத மூன்று மாணவர்களின் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளர். மேலும், அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 2 லட்சம் வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.


மாணவர்கள் உயிரிழப்பு:


இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிவிப்பில், திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், வளையாம்பட்டு கிராமம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கிரிசமுத்திரம் அரசுப் பள்ளிக்கு இன்று காலை சைக்கிளில் சென்று கொண்டிருந்த வளையாம்பட்டு எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்த ரபிக், த/பெ.சாமுவேல் (வயது 13),  விஜய், த/பெ.ராஜி (வயது12), மற்றும் சூர்யா, த/பெ.ராஜி (வயது 10) ஆகிய மூன்று மாணவர்கள் மீது எதிர்பாராத விதமாக கார் மோதி மூவரும் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன்.


நிதியுதவி அறிவிப்பு:


உயிரிழந்த மாணவர்களின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுடைய நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதல்களையும் தெரிவித்துக்கொள்வதோடு அவர்களின் குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன் என தெரிவித்துள்ளார்.


சாலை விபத்து: நடந்தது என்ன?


திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வளையாம்பட்டு பகுதியை சேர்ந்த விஜய்,(8 ஆம் வகுப்பு), சூர்யா (7ஆம் வகுப்பு)  அண்ணன் தம்பிகளான இவர்கள், அதே பகுதியை சேர்ந்த ரபீக் (8 ஆம் வகுப்பு) மாணவருடன் ஒன்றாக கிரிசமுத்திரத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளியில் படித்து வருகின்றனர்.


இவர்கள் 3 பேரும் தினந்தோறும் பள்ளிக்கு  சைக்கிளில் சென்று வருவார்கள். இன்று இவர்கள் மூவரும் வழக்கம்போல் பள்ளிக்கு சென்று  கொண்டிருந்தனர். அப்பொழுது வேலூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் பயிலும் 8 மாணவர்கள் பெங்களூர் பதிவென் கொண்ட காரில்,  ஏலகிரியை  நோக்கி வேகமாக சென்றனர்.


அப்போது கார்  ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையில் குறுக்கு நெடுக்குமாக காரானது ஓடியது. அதில்  சாலையோரம் சைக்கிளில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவர்கள் மீது மோதி சாலையோரம் இருந்த மரத்தின் மீது மோதியது. இதில் கார் மோதியதில் மாணவர்கள் மூன்று பேரும்  தூக்கிவீசப்பட்டனர்.


அப்போது நெடுஞ்சாலையில் இருந்த பொதுமக்கள் இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்து ஓடிச்சென்று பள்ளி மாணவர்களை காப்பற்ற முயன்றனர். மாணவர்கள் மூவரும் தூக்கி வீசப்பட்டதில் மாணவர்களின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். காரில் பயணித்த 8 மாணவர்களும் லேசான காயத்துடன் உயிர்த்தப்பினர். உடனடியாக விபத்து குறித்து அறிந்த வலியாம்பட்டு, கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பெற்றோர்கள் உயிரிழந்த மாணவர்களை பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.


அதன் பிறகு  மாணவர்களின் உடல்களை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து  இவ்விபத்தை ஏற்படுத்திய கல்லூரி மாணவர்களிடையே காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  இதனிடையே திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் பாஸ்கரபாண்டியன் , வேலூர் சரக டிஐஜி முத்துசாமி, திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் வாணியம்பாடி தொகுதி எம்எல்ஏ செந்தில்குமார் ஆகியோர் மருத்துவமனைக்கு சென்று உயிரிழந்த மாணவர்களின் உடலை பார்வையிட்டு மாணவர்களின் பெற்றோர்களுக்கு ஆறுதல் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.