முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்டாலின் எழுதியுள்ள அந்த கடிதத்தில், ஜனநாயக நெறியில்,  ”சட்டத்தின் மாண்பு காத்து  மாநிலத்தின் உரிமையைச் சட்டப்பேரவையில்  நிலைநாட்டிய மகிழ்ச்சியுடன்  தமிழ்நாட்டின்  பொங்கல் விழா தொடங்கியுள்ளது. சட்டப்பேரவையின் மாண்பையும்,  தமிழ்நாட்டின் சுயமரியாதையையும்  காக்கின்ற அரசியல் சட்டம் வழங்கியுள்ள அறவழியிலான  போராட்டத்தை மேற்கொண்ட காரணத்தால் , இந்த பொங்கல் விழா நமக்குக் கூடுதல் இனிப்பு நிறைந்த சக்கரைப் பொங்கலாக அமைந்துள்ளது.






 


அந்தச் சுவை, தமிழ்நாட்டு மக்களின் இல்லங்களில் பொங்கும் பொங்கலிலும்  இடம்பெற்று,  அவர்களின் உள்ளமெல்லாம்  இனித்திட வேண்டும் என்பதற்காக ரூ.1000 ரொக்கத்துடன்  பொங்கல் பரிசுத் தொகுப்பை  வழங்கியுள்ளது  திராவிட மாடல் அரசு. பத்தாண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாட்டின்  தலைநகரான சென்னையில்  பொங்கல் விழாவையொட்டி,  தமிழர்களின்  கலைவிழாவாக  சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது. தலைநகரில் மட்டுமின்றி,  தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட  தமிழர்களின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும்  வீர விளையாட்டுகள்,  கலை விழாக்கள், இலக்கிய நிகழ்வுகள் சிறப்பாக  நடைபெறத் தொடங்கியுள்ளன.


தமிழர்களின் 150 ஆண்டுகால கனவான  - தென் தமிழ்நாட்டின் தொழில்வளத்தையும், வேலைவாய்ப்பையும் பெருக்கும்  சேதுசமுத்திர திட்டத்தை விரைந்து செயல்படுத்திடும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. ஒவ்வொருவர் இல்லத்தின்  வாயிலிலும் ”தமிழ்நாடு வாழ்க”   எனக் கோலமிட்டு, தை முதல் நாளை வரவேற்போம். செழிக்கட்டும்  தமிழ்நாடு, சிறந்தது  இனிக்கட்டும் பொங்கல் திருநாள். உலகெங்கும் வாழும்  தமிழர்களுக்கு  உங்களில்  ஒருவனான என்னுடைய,  இதயம் கனிந்த பொங்கல்  - தமிழர் திருநாள் வாழ்த்துகள்” என முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்தியுள்ளார்.


இதோடு, போராட்டத்தை எதிர்கொண்டு மாநில உரிமையைச் சட்டமன்றத்தில் நிலைநாட்டிய மகிழ்ச்சியுடன் தமிழ்நாட்டின் பொங்கல் விழா தொடங்குகிறது. ஒவ்வொருவர் இல்லத்தின் வாசலிலும் "தமிழ்நாடு வாழ்க" எனக் கோலமிட்டுத் தமிழர் திருநாளாம் தை முதல் நாளை வரவேற்போம் என, முதலமைச்சர் ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.