மதுரையில் ஜல்லிக்கட்டு திருவிழா தொடங்கிவிட்டது. ஜல்லிக்கட்டிற்கான ஆன்லைன் பதிவுகள் நிறைவுபெற்று, ஜல்லிக்கட்டு களத்தை தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. நாளை 15-ம் தேதி அவனியாபுரத்திலும், 16-ம் தேதி பாலமேட்டிலும், 17-ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டியானது நடைபெறுகிறது. பாலமேடு ஜல்லிக்கட்டில் சிறந்த காளையாக தேர்வு செய்யப்படும் காளைக்கு, அதன் உரிமையாளருக்கு கன்றுடன் நாட்டின பசுவை தொடர்ந்து வழங்கி வருகிறார் சமூக ஆர்வலர் பொன்.குமார்.
இந்நிலையில் இந்தாண்டு நான்காவது முறையாக வழங்க உள்ளார். மதுரையில் ஏப்ரல் கூல், மியாவாக்கி காடுகள் உருவாக்கம், கொரோனா முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொண்டு பலரது பாரட்டுக்களை பெற்றவர் அலங்காநல்லூர் பொன்.குமார். இவர் நாட்டின மாடுகளின் நன்மையை உணர்ந்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். இந்தாண்டு 16-ம் தேதி நடைபெறும் பாலமேடு ஜல்லிக்கட்டில் A-2வகை பால்கொடுக்கும் காங்கேயம் பசுவும், கன்றும் வழங்க உள்ளார்.
இது குறித்து கேட்க பொன்.குமாரிடம் பேசினோம்...," ஜல்லிக்கட்டு போட்டிகளில் பரிசாக வேஷ்டி, துண்டுகள் தான் வழங்கப்படும். அதுபோக அண்டா, குத்து விளக்கு போன்றவையும் வழங்கப்படும். ஆனால் தற்போது விலை உயர்ந்த கார், பைக் போன்றவை வழங்கப்படுகிறது. இதனால் நாட்டின காளைகள் மற்றும் பசுக்களின் மீதுள்ள ஆர்வம் குறைந்து பரிசுகள் மீதான நோக்கம் ஏற்படுகிறது.
இதனை போக்கி நாட்டின காளை, பசுக்கள் மீது விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும் கன்றுடன் கூடிய நாட்டின பசுவும் கன்றும் வழங்கி வருகிறேன். இந்தாண்டு கடைப்பல் முளைப்புடன், 2 ஆம் ஈத்து பசுவை வழங்க உள்ளேன். உடன் கொடுக்கப்படும் கன்று 10 நாள் கிடாரி கன்றாகும். தொடர்ந்து 4வது முறை நாட்டின பசு வழங்குவது மகிழ்ச்சி. தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்பட்டு. ஆடம்பரத்தை விட்டுவிட்டு பாரம்பரிய நாட்டின காளை பசுக்களை பரிசாக வழங்கும் வரை என்னுடைய விழிப்புணர்வு தொடரும்" என்றார்.
இதைப் படிக்க மிஸ் பண்ணாதீங்க பாஸ் - கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பழனி முருகன் கோவிலில் 26 வரை பக்தர்கள் மூலவர் தரிசனம் செய்ய அனுமதி இல்லை
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்