கறுப்பு நிற உடை, குதிகாலுக்குச் சற்று உயரமாக ஷூ, காற்றில் அங்குமிங்குமாக அசையும் ஆளுயரக் கோட், எங்கிருந்துதான் வருமோ என ஆச்சரியமாக இருந்தாலும் எப்போதுமே பெய்துகொண்டிருக்கும் மழை அதிலிருந்து தப்பிக்க முன்னெற்றியை மறைத்தபடியான காக்கி தொப்பி. 80களில் வெளியான ஆபாவாணன் பட ஹீரோக்களின் நிரந்தர ஆக்ஷன் சீக்வன்ஸ் கெட்டப் இதுதான். கொட்டித் தீர்க்கும் மழையில் தத்தளிக்கும் சென்னையில் மக்களைப் பார்வையிட வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தற்போது ஆபாவாணின் ஹீரோக்கள் கணக்காகத்தான் வலம் வந்துகொண்டிருக்கிறார். அந்த காஸ்ட்யூம் டிசைனர் யாருப்பா?
வெள்ளநீர் சூழந்த சாலையை கிழித்துக் கொண்டு செல்லும் கறுப்பு சிவப்பு (குறியீடு?) தார் ஜீப், அமைச்சர்கள் சேகர் பாபு, கே.என்.நேரு, இவர்களுடன் உடன் தலைமைச் செயலாளர், சென்னை மாநகராட்சி ஆணையர் என முட்டிக்கால் வரை தண்ணீர் நிற்கும் சாலையில் படையாக முதல்வர் வரும்போதெல்லாம் நமக்குப் பின்னணியில் அவஞ்செர்ஸ் அயர்மேன் பிஜிஎம் கேட்பதைத் தவிர்க்க முடியவில்லை. இப்படி இரண்டுநாட்களாகச் சென்னையின் ஒவ்வொரு பகுதியையும் பார்வையிட்டு வரும் முதலமைச்சர் இன்று கறுப்பு பேண்ட் , கறுப்பு டிஷர்ட் சகிதமாகக் கச்சிதமாக வந்தார்.
வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு சென்னையின் வெள்ளநீரைப் பார்வையிட வந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி, தனது பாதுகாவலர்கள் பிடிமானத்துடன் சென்னை வெள்ளத்தைப் பார்வையிட வந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா என முதுமை தெரிந்த முகங்களுக்கிடையே....மழைக் காலத்தில் சென்னை அப்பார்ட்மெண்ட்களில் எல்லா வீடுகளுக்கும் காய்கறி அரிசி வாங்கித் தருவதிலிருந்து அவர்கள் வீட்டில் அவசர எலக்ட்ரிக் வேலை வரை அனைத்தும் தெரிந்த ஆல் இன் ஆல் அழகுராஜாவாக உதவி செய்யும் பேச்சிலர் குடித்தனப் பிள்ளைகள் ரகமாக முதல்வர் யூத்ஃபுல் ரகமாக சிக்கெனக் காஸ்ட்யூமில் வந்து இறங்கியது அனைவரையுமே தம்ப்ஸப் செய்ய வைத்துள்ளதுதான்.
தலைமைச் செயலகத்தில் வெள்ளைவேட்டி, தூக்கிய காலருடனான வெள்ளைச் சட்டை சகிதம் இருக்கும் முதலமைச்சரை விட இப்படிப் பொதுவெளிகளில் டிஷர்ட் ஜாக்கர் பேண்ட் சகிதம் காணக்கிடைக்கும் முதலமைச்சருக்கு மக்கள் கூடுதல் மதிப்பெண்ணே தருகிறார்கள். எனர்ஜெட்டிக்கான முதலமைச்சரைப் பார்ப்பது நமக்கும் பாசிட்டிவ் வைப்ஸ்தானே. அண்மையில் பெசண்ட நகர் தியாசஃபிக்கல் பூங்காவில் வாக்கிங் சென்ற முதலமைச்சரை ஒரு பெண், ‘எப்படி சார் எப்பவுமே இப்படி இளமையா எனர்ஜியா இருக்கிங்க?’ எனக் கேட்டிருந்தார்.அந்த வீடியோ கூட வைரலானது. உடல்வலிமையில் சற்று கூடுதலாகவே கவனம் செலுத்துபவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்பது தெரிந்ததே.
உடல் வலிமைதான் மன வலிமை
மன வலிமைதான் மனிதனின் வலிமை
மனிதனின் வலிமைதான் மக்களின் வலிமை
மக்களின் வலிமைதான் மாநிலத்தின் வலிமை....