சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு மேலாக காற்றும், கனமழையும் துவைத்து வரும் நிலையில், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்தநிலையில், சென்னை மட்டுமல்லாது கனமழையால் வீடுகளுக்குள் உள்ளே நீர் புகுந்த மக்களை காப்பாற்றவும், பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கவும் 14 அமைச்சர்களை மீட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “நிவாரணப் பணிகளைத் துரிதப்படுத்தவும், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அத்தியாவசியத் தேவைகள் கிடைப்பதை உறுதி செய்யவும், கண்காணிப்புப் பணிகளை விரைவுபடுத்தவும், மேலும் ஏழு அமைச்சர் பெருமக்களை நியமனம் செய்து உத்தரவிட்டுள்ளேன்.


சென்னை மண்டலத்தை பொறுத்தவரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், அமைச்சர் தங்கம் தென்னரசு, அமைச்சர் கே.என்.நேரு ஆகியோர் கண்காணிப்புப் பணிகளை  தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். 


மேலும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் சு. முத்துசாமி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கும், உணவு வழங்கல் துறை அமைச்சர் அர. சக்கரபாணி தாம்பரம் மாநகராட்சிக்கும், வேளாண்மை மற்றும் உழவர்நலத் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆவடி மாநகராட்சிக்கும், போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் கத்திவாக்கம், மணலி, மாத்தூர், சின்னசேக்காடு மற்றும் எண்ணூர் பகுதிகளுக்கும் நியமிக்கப்பட்டுள்ளனர்.


பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வில்லிவாக்கம், அண்ணாநகர், அம்பத்தூர், கே.கே.நகர் மற்றும் எம்.ஜி.ஆர். நகர் பகுதிகளுக்கும், பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள், வேளச்சேரி மற்றும் மடிப்பாக்கம் பகுதிகளுக்கும்,  தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ. கணேசன் சோழிங்கநல்லூர், பெருங்குடி மற்றும் பெரும்பாக்கம் பகுதிகளுக்கும், வணிகவரித் துறை அமைச்சர் திரு.பி. மூர்த்தி திருவள்ளூர் மாவட்டத்தில் குறிப்பாக பூந்தமல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளுக்கும் நேரடியாகச் சென்று நிவாரணம் மற்றும் சீரமைப்புப் பணிகளை மேற்பார்வையிட அறிவுறுத்தியுள்ளேன். 


நேற்று (03.12.2023) காலை 8.30 மணி முதல் இன்று (04.12.2023) காலை 8.30 வரை சென்னையில் 15 இடங்களில் 20 செ.மீ-க்கு மேலாக குறிப்பாக பெருங்குடி போன்ற இடங்களில் 29.16 செ.மீ. என்ற அதி கன மழை பெய்துள்ளது.  அதே போல் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்துள்ளது.  உதாரணமாக திருவள்ளூர் மாவட்டம் ஆவடியில், அதிகபட்சமாக 27.6 செ.மீட்டரும், செங்கல்பட்டு மாமல்லபுரத்தில் 22.04 செ.மீ.-ம் என பல பகுதிகளில் கடுமையான மழை பெய்துள்ளது.


அதுமட்டுமன்றி, சென்னையில் இன்று காலை 8.30 முதல் மதியம் 2.30 வரை முடிந்த 6 மணி நேரத்திற்குள் சராசரியாக சுமார் 12 செ.மீ. அளவிற்கு அதி கனமழை  பெய்துள்ளது. இந்தப் பெருமழை இன்று இரவு வரை தொடரும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  வரலாறு காணாத இந்த புயல் மற்றும் பெருமழையின் காரணமாக ஏற்பட்டுள்ள பொதுமக்களின் துயரைக் குறைக்கும் வகையில் தேவையான அனைத்து மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளையும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.


மேலும், புயல் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை, தாம்பரம், ஆவடி மாநகராட்சி பகுதிகளில் தூய்மைப் பணிகளை நாளை முதல் விரைவு படுத்த, தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் இருந்து 1000 தூய்மைப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.