தூங்கா நகரான மதுரைக்கு பல அடையாளங்கள் உண்டு. அதில் ஒன்று சைக்கிள் ரிக்ஷா பயணம். சைக்கிள் ரிக்ஷாவில் மதுரையை சுற்றி வருவது அலாதியானது. இன்றும், வெளிநாடு சுற்றுலா பயணிகள் அதை தவறவிடுவதில்லை. அதனால் ரிக்ஷாக்காரர் செழிப்பாக இருக்கிறார்களா என்றால், சத்தியமாக இல்லை என்று தான் கூற வேண்டும்.
ரிக்ஷாக்களை மட்டுமே நம்பி, அந்த தொழிலை சார்ந்து இன்னும் பல குடும்பங்கள் மதுரையில் உள்ளன. நாம் பார்க்கவிருப்பவருக்கு ரிக்ஷா தான் குடும்பம். ஆம்... இவர் தான் உண்மையான ரிக்ஷா மாமா. காரணம் இருக்கிறது. மதுரை மாவட்ட செக்கானூரணியைச் சேர்ந்த கருப்பசாமி தான் அந்த ரிக்ஷாக்காரர். திருமணமாகி ஆண், பெண் என இரு பிள்ளைகள் உள்ளனர். அப்புறம் என்ன அவருக்கு துயரம் என்கிறீர்களா... இருக்கிறது. வாங்க பார்க்கலாம்!
ஓடி ஓடி தேய்ந்த கால்கள் என்பார்களே... அது போல தான், கருப்பசாமி உடையது ஓட்டி ஓட்டி தேய்ந்த கால்கள். ரிக்ஷாவை இழுத்து இழுத்து குடும்பத்தை ஓரளவிற்கு சீர்தூக்கினார். மகளை நர்சிங் படிக்க வைத்து திருமணம் செய்து வைத்தார். மகனை பட்டதாரியாக்கி தனியார் நிறுவனத்தில் பணியில் சேர்த்தார். திருநெல்வேலியில் நடந்த உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு சென்ற அவரது மகன், மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சோகம் ஒருபுறம், கருத்து வேறுபாட்டில் மனைவியை பிரிந்த பல ஆண்டுகளாக தனிமை மறுபுறம் என மனிதருக்கு தொட்டதெல்லாம் சோகம் தான்.
இவருக்கு தெரிந்தது ரிக்ஷா மட்டுமே. அதை தவிர வேறு எதுவும் தெரியாது. 60 வயதில் கடந்த 40 ஆண்டுகளாக மதுரை மேலமாசி வீதியில் ரிக்ஷாவில் வட்டமிடுவது தான் இவரது அன்றாட பணி. குடும்பத்தை விட்டு பிரிந்த பின், கடந்த 10 ஆண்டுகளாக ரிக்ஷாவில் தான் அவரது வாழ்க்கை போகிறது. அது தான் வீடு, அது தான் அவருக்கு நாடு எல்லாமே. அதற்குள்ளேயே உறங்கி, உண்டு, காலத்தை கடத்தி வருகிறார். கடந்த கால கொரோனா கொடூரங்கள், அவரின் வாழ்வாதாரத்தை சீரழித்த நிலையில், சைக்கிள் ரிக்ஷாவும் இயக்கப்படாமல் சேதமடைந்துவிட்டது.
தற்போது பிழைக்கலாம் என்றால், ரிக்ஷானை சீர்படுத்த பணமில்லை. அது இயங்கினால் தான் ஒரு வேளை சாப்பாடாவது கிடைக்கும். பிரச்சனை என்னவென்றால், உறங்குவதற்கு கூட நிலையில்லாத அளவிற்கு ரிக்ஷாவின் நிலை மாறிவிட்டது. இதனால் கடும் பனியில் கிடைத்த இடத்தில் தூங்கி காலத்தை கடத்தி வருகிறார் கருப்பசாமி.
எந்த நிலை வந்தாலும், உணவுக்காக அடுத்தவரிடம் கையேந்தக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கும் கருப்பசாமி, தன் சைக்கிள் ரிக்ஷா அருகிலேயே செருப்பு தைத்து, அதில் வரும் வருவாயில் அரை வயிற்று கஞ்சி குடித்து வருகிறார். தனக்கு பெரிய ஆசையில்லை... தனது ரிக்ஷாவை சரிசெய்தால், அது தனக்கு கஞ்சி ஊற்றும் என்கிறார் கருப்பசாமி.
‛சார்... கடந்த 10 வருசமாக இந்த ரிக்ஷால தான் படுத்து, சாப்பிட்டு வர்றேன். கொரோனா காலத்தில வெளிநாட்டு காரங்க வராமல் தொழில் படுத்துடுச்சு. உள்நாட்டு காரங்க ரிக்ஷா பயன்படுத்துறது இல்ல. நாங்க என்ன தான் பண்றது. நிறுத்தி நிறுத்தி வண்டி வீணா போச்சு. போதாக்குறைக்கு ஒரு சின்ன விபத்துல வண்டி டேமேஜ் ஆகிடுச்சு. இதை சரிபண்ணலாம்ன கையில காசு இல்ல... சாப்பாட்டுக்கு வழியில்ல... அப்புறம் எங்கே ரிக்ஷாவுக்கு செலவு பண்றது. செருப்பை தச்சு காலத்தை ஓட்டுறேன்.ரிக்ஷா தயாராயிடுச்சுனா ஏதாவது லோடு ஏத்தி இறக்கி பொழச்சுப்பேன். ஒரு மகன் இருந்தான்... ஏதோ அப்பப்போ உதவி பண்ணுவான். அவனும் எனக்கு முன்னாடி போய் சேர்ந்துட்டான்; குடும்பத்துல ஒட்டு இல்லை. அவங்கட்ட போய் நிக்கவும் மனசு இல்ல. யாராவது உதவி பண்ணாங்கனா... ரொம்ப புண்ணியமா போகும்,’’ என்றார் கருப்பசாமி.
மதுரையை சுற்றிய கால் வெளியே போகாது என்பார்கள், இதுவரை மதுரை மட்டுமே சுற்றி வந்த கால், எப்படி வேறு வேலைக்குப் போகும்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்