மறைந்த அ.தி.மு.க. அவைத்தலைவர் மதுசூதனன் உடலுக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினார்கள்.


அ.தி.மு.க. கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சரும், அக்கட்சியின் அவைத்தலைவருமானவர் மதுசூதனன், 80 வயதான அவர் கடந்த சில தினங்களாக கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தார். இந்த நிலையில், நேற்று அவர் வயது முதிர்வு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது மறைவிற்கு பல்வேறு கட்சியினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இந்த நிலையில், சென்னை தண்டையார்பேட்டை இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள மதுசூதனன் உடலுக்கு உடலுக்கு முதலைமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். அஞ்சலி செலுத்தியபின், ஓபிஎஸ், இபிஎஸ் மற்றும் மதுசூதனன் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வேலுமணி உள்ளிட்டோர் உடனிருந்தார்கள். மேலும், முதலமைச்சருடன் அமைச்சர்கள் சேகர்பாபு, மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோரும் மதுசூதனன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்கள். சசிகலாவும் நேரில் அஞ்சலி செலுத்த இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இன்று மாலை 4 மணியளவில் மதுசூதனின் உடல் அடக்கம் செய்யப்படுகிறது.




அ.தி.மு.க. அவைத் தலைவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமானவர் மதுசூதனன். 80 வயதான அவர் எம்..ஜி.ஆர். 1972ல் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கியதிலிருந்து அவருடன் பயணித்தவர்.  மதுசூதனன் கட்சி வழியாக அறியப்பட்டது 1972க்குப் பிறகுதான் என்றாலும் எம்.ஜி.ஆரின் தீவிர ரசிகர் மன்றத்தலைவர் மது அண்ணன் என்பதுதான் இவரது ஆதிகால அடையாளம். பின்பு கட்சியினரிடையேயும் மது அண்ணன் என்கிற பெயரே இவருக்கு நிலைத்துப்போனது. எம்.ஜி.ஆரால் கட்சிக்கு அழைத்துவரப்பட்டவர், பின் கட்சியின் மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 


எம்.ஜி.ஆரின் இறப்புக்குப் பிறகு அ.தி.மு.க. ஆட்டம் கண்டபோது நங்கூரமென இருந்து அது கவிழ்ந்துவிடாமல் காத்தவர் மதுசூதனன். எம்.ஜி.ஆர். இறப்புக்குப் பிறகு கட்சி ஜானகி அணி. ஜெயலலிதா அணி எனப்பிரிந்த காலத்தில் ஜெயலலிதா அணியைத் தேர்ந்தெடுத்தார். சிலர் வெளிப்படையாகவே ஜெயலலிதாவுக்கு மிரட்டல் விடுத்த காலத்தில் சுமார் ஒருவார காலம் போயஸ் தோட்டத்துக்குக் காவல் இருந்தார். அந்தக்காவல் 1989ல் சட்டசபைக் கலவரத்தின்போது சட்டமன்றம் வரை நீடித்தது. 




இதே மதுசூதனன்தான் ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு பன்னீர்செல்வத்தின் பக்கத்தைத் தேர்ந்தெடுத்தார். 2007ம் ஆண்டுமுதல் கட்சியின் அவைத்தலைவராக இருந்துவரும் மதுசூதனனை பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு அளித்ததன் காரணமாகக் அவைத்தலைவர் பொறுப்பிலிருந்து நீக்கினார் சசிகலா. 


கட்சியில் மாவட்டச் செயலாளராகத் தன் பயணத்தைத் தொடங்கிய மதுசூதனன் 1991-ஆம் ஆண்டில் ஆர்.கே.நகர் தொகுதியிலிருந்து சட்டமன்றத்துக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1991ல் ஜெயலலிதாவின் முதல் அமைச்சரவையிலேயே கைத்தறித்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார். அந்தக் காலக்கட்டத்தை சென்னையின் கலவரக்காலம் எனலாம். சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியன் சுவாமி மீது அதிமுகவினர் நடத்திய தாக்குதல்,ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்திரலேகா மீதான ஆசிட் வீச்சு சம்பவம், தராசு ஊழியர் படுகொலை, ப.சிதம்பரம் வாகனம் மீது தாக்குதல், அண்ணா பல்கலை. துணை வேந்தராக அப்போது பதவி வகித்த முனைவர் அனந்தகிருஷ்ணன் வீடு மீது தாக்குதல், வக்கீல் விஜயன் மீதான கொலைவெறி தாக்குதல், மூத்த வழக்கறிஞர் சண்முக சுந்தரத்தின் மீதான தாக்குதல் என வன்முறைத் தாக்குதல்கள் ஒவ்வொன்றிலும் மதுசூதனன் பெயரும் அடிபட்டது. 2000ம் ஆண்டில் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஜெயலலிதாவால் நீக்கப்பட்ட மதுசூதனன், பின்னர் 2010ம் ஆண்டு ஜெயலலிதாவால் அவைத்தலைவராக நியமிக்கப்பட்டார்.