CM Stalin: கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை அனுப்பி வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். 


வடகிழக்கு பருவமழை:


தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. தொடக்கத்தில் குறைவான  மழையே பெய்தாலும், கடந்த ஒரு வாரமாக பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டிய மாவட்டங்கள் மற்றும் தென் மாவட்டங்களில் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் நேற்று தொடங்கிய கனமழை விட்டுவிட்டு தொடர்ந்து பெய்து வருகிறது. தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி இன்று உருவாகி உள்ளது. அது மேலும் வலுவடையும் என்பதால் 6 மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்து உள்ளது.


விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர்,  அரியலூர், திருச்சி, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சோரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளின் கடலோரப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்திருந்தது. அதேபோல, தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை தொடரும் என்று வானிலை மையம் அறிவித்துள்ளது.


அமைச்சர்களுக்கு பறந்த உத்தரவு


இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய உத்தரவு பிறப்பித்துள்ளார். அதாவது,  கனமழை முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள அமைச்சர்களை அனுப்பி வைக்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். கடலூர், மயிலாடுதுறை, நாகை மாவட்டங்களுக்கு அமைச்சர்கள் செல்ல முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து வெளியாக அறிக்கையில், "கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள 27 மாவட்டங்களில் மேற்கொள்ளுமாறு தக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மாவட்ட ஆட்சியர்களுக்கு 13.11.2023 அன்று அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.


மேலும், 13.11.2023 மற்றும் 14.11.2023 நாட்களில் தமிழக கடலோரப் பகுதிகள். மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 முதல் 55 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும், இப்பகுதிகளில் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில், இந்த தகவலை ஆழ்கடலில் உள்ள மீனவர்களுக்கும். கரையில் உள்ள மீனவர்களுக்கும் தெரிவிக்குமாறு மீன்வளத்துறை ஆணையர் மற்றும் கடலோர மாவட்ட ஆட்சியர்கள் வாயிலாக கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.


கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ள கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரண நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பொருட்டு மாண்புமிகு அமைச்சர் பெருமக்களை அனுப்பி வைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். திருவள்ளூர், செங்கல்பட்டு. விழுப்புரம். கடலூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், சிவகங்கை. மதுரை, தேனி மற்றும் திண்டுக்கல் ஆகிய 13 மாவட்டங்களின் நியமிக்கப்பட்டுள்ள மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் கண்காணிப்பு அலுவலர்களாக தொடர்புடைய மாவட்டங்களுக்கு விரைந்து சென்று முன்னெச்சரிக்கை மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளானர்.


மாநில / மாவட்ட அவசரகால செயல்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும்  1070 மற்றும் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.  மேலும், Whatsapp எண் 94458 69848 மூலம் புகார்களை பதிவு செய்யலாம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.