சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை நேரத்தின்போது தன்னைப் புகழ்ந்து பேசினால் அந்த எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேரவையில் எச்சரிக்கை விடுத்துள்ளார். சட்டப்பேரவையில் மானியக் கோரிக்கை விவாத நேரத்தின்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். மானியக் கோரிக்கை விவாதத்தில் பேசிய கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் முதலமைச்சர் ஸ்டாலினைப் புகழ்ந்தார். அவரை இடைமறித்த முதலமைச்சர் இவ்வாறு கூறினார். மேலும், ‘எதையும் லிமிட்டாக வைத்துக்கொள்ளுங்கள். நேற்றே இது தொடர்பாகக் கட்டளையிட்டேன்.இனியும் புகழ்ந்து பேசினால் அந்த எம்.எல்.ஏ.க்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்’ என எச்சரித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று சட்டத்துறை அமைச்சர் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்யும் முன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதி மற்றூம் தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருக்குப் புகழாரம் சூட்டினார்.
அப்போது முதல்வர் ஸ்டாலின் குறுக்கிட்டு, ‘அமைச்சர் சட்ட முன்வடிவை அறிமுகம் செய்ய நேரடியாக வரவேண்டும். பதில் அளித்துப் பேசும்போது சில வார்த்தைகளைச் சேர்த்துக்கொள்ளலாம். திமுக எம்.எல்.ஏ.-க்களுக்கு அமைச்சர்களுக்கு கண்டிப்பான வேண்டுகொள். பதிலுரையின் போது உங்களை ஆளாக்கிய, உருவாக்கிய முன்னோடிகளுக்கு வணக்கம் செலுத்தி பேசுவது முறை. கேள்வி நேரத்தின்போதும் சட்ட முன்வடிவு அறிமுகப்படுத்தும் போதும், அதை பயன்படுத்தக் கூடாது.
நேரத்தின் அருமையை பார்க்கவேண்டும். ஒவ்வொரு முறையும் நான் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.இங்கிருக்கும் அமைச்சர்களுக்கு ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்களுக்கு இதுதான் என் கட்டளை’ என உத்தரவிட்டார்.
முன்னதாக, தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று மத்திய அரசின் வேளாண் திருத்த சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அதிமுக, பாஜக எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தது.
தீர்மானத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்தார். இதனைத்தொடர்ந்து, தமிழ்நாட்டில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடியவர்கள் மீதான வழக்குகள் அனைத்தும் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. எம்எல்ஏக்கள் வேல்முருகன், ஜவாஹிருல்லாவின் கோரிக்கையை ஏற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்தார். வேளாண் மசோதாவுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புகள் மீதான வழக்குகள் வாபஸ் பெறப்படுவதாக முதலமைச்சர் கூறினார்.
“வேளாண் தொழில் பெருகவும், விவசாயிகள் வாழ்வு செழிக்கவும் இந்த அரசு மிகுந்த முக்கியத்துவம் அளித்து, இம்மாநிலத்தின் வரலாற்றில் முதன்முறையாக வேளாண்மைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையைச்
சமர்ப்பித்து வேளாண்மைத் துறையின் பெயரினை, 'வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை` என மாற்றி ஒரு உயர்ந்த குறிக்கோளோடு செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு ஒன்றிய அரசு விவசாயிகள் நலனுக்கு எதிராகக் கொண்டு வந்த சட்டங்கள் முறையே
(i) விவசாயிகள் உற்பத்தி வர்த்தகம் மற்றும் வாணிபம் (ஊக்குவிப்பு மற்றும் உதவுதல்) சட்டம், 2020;
(ii) விவசாயிகள் (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாத்தல்) விலை உறுதி மற்றும் பண்ணைச் சேவைகள் ஒப்பந்தச் சட்டம், 2020
(ii) அத்தியாவசியப் பொருட்கள் (திருத்தம்) சட்டம், 2020 ஆகிய மூன்று சட்டங்களும் நமது நாட்டின் வேளாண் வளர்ச்சிக்கும், விவசாயிகளின் நலனுக்கும் உகந்ததாக இல்லை என்பதால், அவை ஒன்றிய அரசினால் இரத்து செய்யப்படவேண்டும் என இந்தச் சட்டமன்றப் பேரவையில் ஒருமனதாக இத்தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது".
மேற்படி தீர்மானத்தை நிறைவேற்றித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன். மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக, மாண்புமிகு சட்டமன்ற உறுப்பினர்களை மீண்டும் கேட்கிறேன் இந்தத் தீர்மானத்தை ஏகமனதாக நிறைவேற்றித் தர வேண்டுமென்று கேட்டு, அமர்கிறேன்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.