சென்னை கொளத்தூரில் அனிதா அகாடமியில் கணினி, தையல் பயிற்சி முடித்தவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், பயிற்சி முடித்தவர்களுக்கு தையல் இயந்திரம், மடிக்கணினி ஆகியவற்றை முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கினார். அதனை தொடர்ந்து பேசிய அவர், “நீட் என்ற கொடுமையான தேர்வுக்கு என்றைக்கு முற்றுப்புள்ளி வைக்கின்றோமோ. அன்றைக்குதான் நாம் அனிதாவுக்கு உண்மையான அஞ்சலி செலுத்தக்கூடிய நாளாக அது அமைந்திடமுடியும்.


நீட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தே ஆகவேண்டும் என்ற உறுதியை அனிதா முதல் சமீபத்தில் மறைவெய்திய ஜெகதீஸ்வரன் வரைக்கும் அந்த மாணவச் செல்வங்கள் நமக்கு உணர்த்திக் கொண்டே இருக்கிறார்கள்.


நம்முடைய அனிதா பெயரில் அச்சீவர்ஸ் அகாடமி தொடங்குவதிலிருந்து, டேலி படிப்பைப் பொறுத்தவரையில், இதுவரை 9 batch முடித்து, 743 மாணவிகள் இலவச வேட்டாப் மற்றும் சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள். ஆண்களில், இதுவரை 5 batch முடித்து, 381 மாணவர்கள் இலவச லேப்டாப் மற்றும் சான்றிதழ் வாங்கியிருக்கிறார்கள். இன்றைக்கு. மேலும் 136 மாணவ மாணவிகளுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட இருக்கிறது.


தையல் பயிற்சியை பொறுத்தவரை, இதுவரை 5 batch-ல் 1,467 பெண்கள் இலவச பயிற்சி முடித்து, சான்றிதழ் மற்றும் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம் பெற்றிருக்கிறார்கள். இன்றைக்கு 6-ஆவது batch-ல் 359 பெண்களுக்கு சான்றிதழ் மற்றும் மோட்டார் பொருத்திய இலவச தையல் இயந்திரம் வழங்கப்பட இருக்கிறது. தற்போது, 491 மாணவ மாணவிகள் டேலி மற்றும் தையல் பயிற்சியை பெற்று வருகிறார்கள். இந்தப் பயிற்சிகளை முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டு வருகிறது.


பட்டப்படிப்புடன் சேர்ந்து இதுபோன்ற தனித்திறமைகள் இருந்தால்தான் வளர முடியும். அந்த வாய்ப்பை நாம் உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர்கள் கல்வியில், அறிவாற்றலில் சிறந்தவர்களாகவும், தனித்திறமை கொண்டவர்களாகவும் வளரவேண்டும். அதற்காகத்தான் “நான் முதல்வன்" என்ற திட்டத்தை தொடங்கி வைத்தேன். இது என்னுடைய கனவுத் திட்டம். ஆண்டுக்கு, பத்து லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டோம். எவ்வளவு? ஆண்டிற்கு 10 இலட்சம் பேருக்கு திட்டமிட்டோம். ஆனால் கடந்த ஆண்டு 13 வட்சம் மாணவர்கள் இதில் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்குத் தகுதிக்கு ஏற்ற வேலைவாய்ப்புகள் கிடைத்துக் கொண்டு வருகிறது.


அனைத்துத் தரப்பினர் நலனையும், பாதுகாத்து வருகின்ற அரசுதான் நம்முடைய அரசு, ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்தது முதல், சமூக மேம்பாட்டிற்காக சமூக நீதியின் அடிப்படையில் பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்திக் கொண்டு வருகிறோம். அந்தத் திட்டங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் மிகப் பெரிய செல்வாக்கு வந்து கொண்டிருக்கிறது.


குறிப்பாக, கல்லூரி மாணவ, மாணவியரின் வேலை வாய்ப்புக்கான தனித்திறனை மேம்படுத்தும் நான் முதல்வன் திட்டம். இங்கே வாழ்த்துரை வழங்கிய சகோதரி அவர்கள் குறிப்பிட்டுச் சொன்னார். ஏழை, எளிய பெண்களின் மாதாந்திரச் செலவில் குறிப்பிட்ட தொகையை மிச்சப்படுத்தி வாழ்வாதாரத்தை வலுப்படுத்தி வரும் விடியல் பயணத்திட்டம், பெண்கள் உயர்கல்விக்கு செல்வதை ஊக்கப்படுத்தும் வகையில் புதுமைப்பெண் திட்டம். பள்ளிகளுக்கு வாக்கூடிய குழந்தைச் செல்வங்கள் பட்டினியுடன் வரும் இந்த செல்வங்களுடைய பசியை ஆற்றி வரக்கூடிய காலை உணவுத்திட்டம். ஏழை, எளிய குடும்பத் தலைவிகளின்


பொருளாதாரத் தற்சார்பை உறுதிப்படுத்தக் கூடிய கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் இன்னும் மூன்று நாட்களுக்குள் வருகின்ற செப்டம்பர் 15-ஆம் தேதி அண்ணா பிறந்த நாளன்று அவர் பிறந்த காஞ்சிபுரத்தில் நான் தொடங்கி வைக்க இருக்கிறேன். இப்படி நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரக்கூடிய திட்டங்களை எல்லாம் பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.


இந்தத் திட்டங்களுக்குரிய நிதி ஒதுக்கீடு அதாவது செலவை எல்லாம் கூட நாங்கள் செலவினங்களாக பார்க்கவில்லை. எதிர்காலத் தலைமுறைகளின் வளர்ச்சிக்கான முதலீடுகளாக நாங்கள் பார்க்கின்றோம்!


வகையில், அந்தத் திட்டம் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. நம்மையெல்லாம் ஆளாக்கிய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் பெயரால் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தை நாம் தொடங்கப் போகின்றோம். இன்னும் சொல்லப்போனால், இந்தத் திட்டத்தின் மூலமாக உதவித்தொகை கொடுக்கவில்லை; உரிமையை கொடுக்கின்றோம். அதுதான் முக்கியம். அதனால்தான் கலைஞர் அவர்கள் மகளிர்க்கு சொத்தில் சம உரிமை அளித்து அவர்களுடைய சுய மரியாதையை காப்பாற்றி இருக்கிறார்.


இந்த மகளிர் உரிமைத் திட்டத்தைப் பொறுத்தவரைக்கும், இந்தத் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருக்கின்ற சுமார் 1 கோடிக்கும் அதிகமான பெண்கள் பயனடையப் போகிறார்கள்! ஒரு கோடி பெண்கள் என்றால், ஒரு கோடிக் குடும்பங்கள்! இன்னும் பல தலைமுறைகள் என்று எடுத்துக்கொள்ள வேண்டும்!


ஏழை. எளிய பெண்களுக்கு யாரையும் எதிர்பார்க்கத் தேவை இல்லாத பொருளாதார விடுதலையையும் இந்தத் திட்டம் நிச்சயமாக அளிக்கப் போகின்றது. இப்படி, அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கும் உன்னதமான நோக்கத்துடன் செயல்பட்டுவரும் இந்த அரசுக்கு அனைவரும் வழக்கம் போல் நல்ல ஒத்துழைப்பை வழங்குங்கள். உங்களை எல்லாம் பார்க்கின்ற நேரத்தில் ஏதோ பணிகளை எல்லாம் நிறைவு செய்துவிட்டோம், முடித்துவிட்டோம் என்று சொல்லவில்லை. இன்னும் செய்யவேண்டும். இன்னும் செய்யப் போகிறோம். இன்னும் செய்வதற்கான அந்த ஆக்கமும், உற்சாகத்தையும் நீங்கள் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள்” என பேசினார்.