சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, தா.மோ.அன்பர்சன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அஞ்சலி செலுத்திய பின் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் உடல் இன்று 12 மணிக்கு குரோம்பேட்டை யில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, மதியம் 3 மணிக்கு கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு கொண்டுவரப்படும். நாளை இறுதி நிகழ்வுகள் நடைபெறுகிறது.
திருமாவளவன் இரங்கல்:
தமிழகத்தின் மூத்த தலைவரும் முதுபெரும் தலைவருமான 'தகைசால் தமிழர்' தோழர் #சங்கரய்யா(102) அவர்களின் மறைவு மிகுந்த துயரமளிக்கிறது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று பல்லாண்டுகள் சிறையில் வாடியவர். தமிழகத்தில் பொதுவுடைமை இயக்கம் வளர்வதற்கு பெரிதும் பங்களிப்பு செய்தவர். அவரது மறைவு பொதுவுடைமை இயக்கங்களுக்கும் உழைக்கும் விளிம்புநிலை மக்களுக்கும் நேர்ந்த ஈடுசெய்ய இயலாத பேரிழப்பாகும். அவருக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.
அன்புமணி இராமதாஸ் இரங்கல் :
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவரும், நாட்டின் விடுதலைக்காக போராடியவருமான தோழர் சங்கரய்யா அவர்கள் உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாறாக இருந்தாலும், போராட்ட வரலாறாக இருந்தாலும் அதை தோழர் சங்கரய்யா அவர்களை தவிர்த்துவிட்டு எழுத முடியாது என்று கூறும் அளவுக்கு அனைத்து அரசியல் நிகழ்வுகளிலும், போராட்டங்களிலும் கலந்து கொண்டவர். கொண்ட கொள்கையில் மிகவும் உறுதியாக இருந்தவர். அதே நேரத்தில் நூற்றாண்டைக் கடந்து தமது இறுதிக் காலம் வரை மிகவும் எளிமையான வாழ்க்கை வாழ்ந்தவர். ஏராளமான இளம் தலைவர்களை உருவாக்கிய பெருமைக்கு சொந்தக்காரர்.
இராமதாஸ் இரங்கல்:
இந்திய விடுதலைப் போராட்டத் தியாகியும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனத் தலைவர்களில் ஒருவருமான தோழர் என்.சங்கரய்யா உடல்நலக் குறைவால் இன்று காலை காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமும், வேதனையும் அடைந்தேன்.
இடது சாரி இயக்கங்களின் தலைவர்கள் வாழ்க்கை போராட்டங்களால் நிரம்பியிருக்கும். ஆனால், தோழர் சங்கரய்யா அவர்கள் போராட்டத்தையே வாழ்க்கையாகக் கொண்டவர். பள்ளிப் பருவத்தில் தொடங்கி, நூற்றாண்டை கடந்த பிறகும் கூட மக்கள் உரிமைகளுக்காகவும், சமூகக் கேடுகளுக்கு எதிராகவும் போராடி வந்தவர். தமிழ்நாட்டு மக்களால் மிகவும் மதிக்கப்பட்ட தலைவர்களில் ஒருவர்.
எல். முருகன் இரங்கல்:
தான் கொண்ட கொள்கையில் இறுதி மூச்சு வரை போராடியவர், சுதந்திர போராட்ட தியாகி ஐயா சங்கரய்யா அவர்களின் மறைவு வருத்தத்தை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் அவரது குடும்பத்தார் மற்றும் கட்சியினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி..!
கே. எஸ்.அழகிரி இரங்கல்:
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான தோழர் என். சங்கரய்யா அவர்கள் தனது 102-வது வயதில் காலமான செய்தி கேட்டு மிகுந்த வருத்தமும், துயரமும் அடைந்தேன். தமிழகத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், தொழிலாளர் வர்க்கத்திற்காகவும் தமது வாழ்நாள் முழுவதும் உரிமைக் குரல் எழுப்பி பல்வேறு போராட்டங்களை நடத்தி பலமுறை சிறை புகுந்தவர். எளிமையான வாழ்க்கையை மேற்கொண்டு மக்களோடு மக்களாக தொண்டால் பொழுதளந்த தூய்மையான தலைவர். தமிழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் வளர்வதற்கு தனது வாழ்நாளை அர்ப்பணித்தவர்.
அண்ணாமலை இரங்கல்:
முதுபெரும் அரசியல் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவருமான திரு. சங்கரய்யா அவர்கள் காலமானார் என்ற செய்தியறிந்து மிகுந்த வருத்தமடைகிறேன். மூத்த தலைவரான திரு. சங்கரய்யா அவர்களது மறைவு, தமிழக அரசியலுக்கு பேரிழப்பு. திரு. சங்கரய்யா அவர்களின் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் தமிழ்நாடு பாஜக சார்பாக ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி.