ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க மசூதிகளுக்கு பச்சரிசி வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும், மசூதிகளுக்கு தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சியர்களுக்கு முதலமைச்சர் அறிவுரை வழங்கியுள்ளார். 


இதுகுறித்து தமிழ்நாடு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு புனித ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க ஒவ்வொரு ஆண்டும் பள்ளிவாசல்களுக்கு பச்சரிசி தமிழக அரசால் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டுகளைப் போலவே, 2024-ஆம் ஆண்டிலும் ரமலான் மாதத்தில் நோன்பு கஞ்சி தயாரிக்க பள்ளிவாசல்களுக்கு அரிசி வழங்க வேண்டும் என்று இஸ்லாமிய மக்களிடமிருந்து கோரிக்கைகள் வந்துள்ளன.






2024-ஆம் ஆண்டு, ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கும் இஸ்லாமிய மக்களுக்கு நோன்பு கஞ்சி தயாரிப்பதற்கு ஏதுவாக பள்ளிவாசல்களுக்கு மொத்த அனுமதியின்கீழ் நோன்பு கடைபிடிக்கப்படும் நாட்களுக்கு மட்டும் பச்சரிசி வழங்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்கள். அவர்கள்


பள்ளிவாசல்களுக்குத் தேவைப்படும் அரிசிக்கான மொத்த அனுமதியை வழங்க மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்குத் தக்க அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதன்படி,7,040 மெட்ரிக் டன் அரிசி மொத்த அனுமதி மூலம் பள்ளிவாசல்களுக்கு வழங்கப்படும். இதனால், அரசுக்கு 26 கோடியே 81 இலட்சத்து 53 ஆயிரத்து 600 ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.


ரமலான் பண்டிகை:


ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் ரம்ஜான் (ரமலான்) பண்டிகையை இஸ்லாமியர்கள் மட்டுமின்றி, அனைத்து மதத்தினரும் மதநல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து மதத்தினரும் இணைந்தே பல இடங்களில் கொண்டாடி வருகின்றனர். 


இஸ்லாமியர்களின் புனிதமான மாதமான ரமலான்(Ramadan Month) வருகின்ற மார்ச் 10 ஆம் தேதி முதல் தொடங்கி ஏப்ரல் 9ம் தேதி வரை கொண்டாடப்பட இருக்கிறது. இஸ்லாம் மார்க்கத்தைப் பின்பற்றும் இஸ்லாமிய மக்கள், இந்த மாதத்தில் அதிகாலை  சூரிய உதயத்திற்கு முன் எழுந்து இறைவனை தொழுது உணவு உண்டு நோன்பை தொடங்குவர். 


அதன் பிறகு சூரிய அஸ்தமனத்திற்கு பின், நோம்பை முடிப்பார்கள். இவர்கள் நோன்பு திறப்பதை இப்தார் என்று அழைப்பர். நோன்பு இருக்கும் முப்பது நாட்களும் தினசரி ஐந்து முறை தொழுகை செய்வது கட்டாயமாகும். ரமலான் மாதத்தை  இறைவனின் அருள் பெரும் மாதம் என்கிறார்கள் இஸ்லாமிய மத குருமார்கள். ரம்ஜான் மற்றும் ரமலான் என்றப் பெயர்களால் இந்த பண்டிகை அழைக்கப்படுகிறது.