வேளாண் நிதி நிலை அறிக்கை தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் கொண்டுள்ளார். உழவர் பெருமக்களது வாழ்வுக்கு மேன்மைக்குமான அனைத்து திட்டங்களையும் தீட்டி இருக்கிறோம். திமுக அரசு, உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறது என்பதை வேளாண் நிதி நிலை அறிக்கை உணர்த்துகிறது. மாநிலத்து மக்களை மட்டுமல்ல, மண்ணுயிர் அனைத்தையும் மேம்படுத்தும் ஆட்சி நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “மாநிலத்து மக்களை மட்டுமல்ல மண்ணுயிர் அனைத்தையும் மேம்படுத்தும் ஆட்சியாகத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நடைபெற்று வருகிறது. கழக ஆட்சி அமைந்தால் வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்வோம் என்று தேர்தலுக்கு முன் வாக்குறுதி அளித்தோம். சொன்னதைச் செய்து காட்டும் இந்த அரசானது, ஆட்சிக்கு வந்த உடனேயே வேளாண் அறிக்கையைத் தயாரித்துத் தாக்கல் செய்தது; தாக்கல் செய்த அறிக்கையின்படி செயல்பட்டது.
இதன் மூலமாகத் தமிழ்நாட்டின் பாசனப் பரப்பு அதிகமானது; விளைச்சல் அதிகமானது; உற்பத்தியான பொருளுக்கு நல்ல விலை கிடைத்தது; உழவர் பெருமக்கள் மிகுந்த மகிழ்ச்சியடையும் வகையில் பலனைப் பெற்றார்கள்!
மண்ணும் செழித்தது! மக்களும் செழித்தார்கள்! இதனைக் கண்முன்னால் கண்டு வருகிறோம்.
இந்த வரிசையில் நான்காவது முறையாக வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்றைய தினம் தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இரண்டு மணிநேரம் அவரால் வாசிக்கப்பட்ட இந்த நிதிநிலை அறிக்கையானது இயற்கை வளத்தை மேம்படுத்திக் காட்டும் ஈடு இணையற்ற அறிக்கையாக அமைந்துள்ளது. வேளாண்மையை உணவுத் தேவைக்காக மட்டுமோ, அல்லது. அதனைத் தொழிலாக மட்டுமோ கருதுபவர்கள் அல்ல நாம்.
நமது தமிழ்ப் பண்பாட்டுடன் கலந்ததுதான் வேளாண்மையாகும். அதனால்தான் அதற்கெனத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்யும் கடமை நமக்கு உண்டு. மொழிக்கு இலக்கணம் வகுத்ததுபோல நிலத்துக்கும், மண்ணுக்கும் இலக்கணம் வகுத்த நம் முன்னோர் வழியில் நாம்
செயல்பட்டு வருகிறோம் என்பதற்கு அழுத்தமான சாட்சியமாக 2024 -25- ஆம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
மண் வளம் பேணிக் காக்கவும், மக்கள் நலன் காக்கவும் உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செயல்முறைகளையும் ஊக்கப்படுத்திட 'முதலமைச்சரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம்' அமைந்துள்ளது. இராசயன உரங்களை அதிகம் பயன்படுத்துவதால் மண்ணிலுள்ள நுண்ணியிர்களின் எண்ணிக்கை குறைந்து மண் வளம் குறைந்து வருகிறது. எனவே மண் வளத்தை மீட்டெடுக்க அனைத்து முயற்சிகளையும் அரசு எடுத்து வருகிறது. இரசாயன உரங்களைக் குறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நெற்பயிரில் இரசாயன மருந்துகளைக் குறைத்தலுக்கு முக்கியத்துவம் தரப்பட்டுள்ளது.
கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டமானது 2400-க்கும் மேற்பட்ட கிராம ஊராட்சிகளை உயர்த்தப் போகிறது. மரபுசார் நெல் இரகங்களை ஊக்குவிக்கப் போகிறோம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும் சிவன் சம்பா நெல் ரகம் அதிகம் பயிரிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களின் வாய்க்கால்களைத் தூர்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நெல் உலர்த்தும் இயந்திரங்கள் மானியத்தில் வழங்கப்பட உள்ளன. வேளாண் இயந்திரங்கள் வாடகைக்குக் கிடைக்கும் மையங்களை உருவாக்க இருக்கிறோம். இயற்கைச் சீற்றங்களால் உழவர்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் இருந்து அவர்களை மீட்கப் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு அந்தத் திட்டத்துக்கு மட்டும் 1,775 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
'ஒரு கிராமம் ஒரு பயிர்' என்ற திட்டம் 15 ஆயிரத்து 280 கிராமங்களில் செயல்படுத்தப்பட இருக்கிறது. பத்து ஆண்டுகளாகப் பாசன மின் இணைப்புக்கான விண்ணப்பங்களை அ.தி.மு.க. அரசு கிடப்பில் போட்டு வைத்திருந்தது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் மட்டும் 1.50 லட்சம் பேருக்கு இலவச மின் இணைப்புகளை கழக அரசு வழங்கி உள்ளது. இந்த ஆண்டில் மேலும் 50 ஆயிரம் பேருக்கு இலவச மின்சார இணைப்பு வழங்க இருக்கிறோம்.
நெல்லுக்குச் சிறப்பு ஊக்கத்தொகை வழங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கரும்பு விவசாயிகளுக்குச் சிறப்பு ஊக்கத் தொகையாக டன் ஒன்றுக்கு 215 ரூபாய் கூடுதலாக வழங்கப்பட்டுள்ளது.
தொழில் துறை சார்பில் நடைபெறுவதைப் போல வேளாண்மைத் துறை சார்பில் கண்காட்சி. திருவிழா. சங்கமம் போன்றவற்றை நடத்தி வேளாண்மை மீதான ஆர்வத்தைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து உருவாக்கி வருகிறது. உழவர்கள்' மட்டும்தான் வேளாண்மை செய்ய வேண்டும் என்று இல்லை. தொழில் துறையைப் போல அனைவரையும் வேளாண்மையை நோக்கி ஈர்க்க வைக்கும் முயற்சித் திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்டு இருப்பதை அனைவரும் உணரலாம். முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா மலர்க் கண்காட்சியானது சென்னையில் நடைபெற்று வருகிறது. நாள்தோறும் பல்லாயிரக்கணக்கானவர்கள் அதனைப் பார்த்து வருகிறார்கள். இவை போன்ற முயற்சிகள். வேளாண்மையை அடுத்தகட்டத்துக்கு கொண்டு செலுத்தும்.
மண் வளத்தில் இருந்து மக்கள் நலம் வரைக்கும் கவனித்து இந்த நிதிநிலை அறிக்கையைத் தயாரித்து வழங்கியுள்ள வேளாண் மற்றும் உழவர் நலன் அமைச்சர் மாண்புமிகு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களைப் பாராட்டுகிறேன். துறையின் செயலாளர் செல்வி. அபூர்வா இ.ஆ.ப., அவர்களுக்கும், துறை சார்ந்த மற்ற அதிகாரிகள் அனைவர்க்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மூன்று வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்து, உழவர் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ஒன்றரை ஆண்டுகள் தலைநகர் டெல்லியில் தங்கிப் போராடினார்கள் உழவர்கள். அவர்களது எதிர்ப்பினால் பின்வாங்கியது பா.ஜ.க. அரசு. இப்போது மீண்டும் டெல்லியில் உழவர்கள் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. அவர்கள் மீது இரக்கமற்ற வகையில் தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. பசிப்பிணி போக்கும் மருத்துவர்களாம் வேளாண் பெருமக்களது கோரிக்கைகளுக்குச் செவிமடுக்கக்கூட மனமில்லாத வகையில் ஒன்றிய அரசு உள்ளது. உழவர்களைத் தடுக்கச் சாலைகளில் ஆணியைப் புதைக்கும் அரசாக பா.ஜ.க. அரசு உள்ளது.
அதேநேரத்தில் உழவர் பெருமக்களது வாழ்வுக்கும் மேன்மைக்குமான அனைத்துத் திட்டங்களையும் தீட்டி வழங்கும் அரசாகத் தி.மு.க. அரசு உள்ளது. இதன் மூலமாக உழவர் பெருமக்களை உயிராக நினைக்கிறோம் என்பதை அனைவரும் அறியலாம்.
மண்ணையும் காப்போம்! மக்களையும் காப்போம்!
மண்ணையும் வளர்த்து, மக்களையும் வாழ்விப்போம்!” என குறிப்பிட்டுள்ளார்.