அயலகத் தமிழர் மாநாட்டில் 13 பேருக்கு தங்கப்பதக்கம் வழங்கி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்,”எனக்கு உடல் நலமில்லை. உற்சாகமாக இல்லை என்று நேற்று ஒரு பத்திரிகையில் எழுதி இருந்தார்கள். அதை படித்தபோது எனக்கு சிரிப்புதான் வந்தது. எனக்கு என்ன குறை?


தமிழ்நாடும், தமிழ்நாட்டு மக்களும் மகிழ்ச்சியாக இருக்கின்றபோது, அதைவிட எனக்கு வேறு என்ன வேண்டும்? நேற்று ஒரு வீடியோ பார்த்தேன். சென்னையை சேர்ந்த ஒரு சகோதரி பேசுகிறார்கள்.. "கலைஞர் மகளிர் உரிமைத் தொகையில் ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. பொங்கல் பரிசாக ஆயிரம் ரூபாய் வந்துவிட்டது. அரிசி, சர்க்கரை, கரும்பு வந்துவிட்டது... வெள்ள நிவாரணமாக ஆறாயிரம் ரூபாய் கிடைத்துவிட்டது. ஒரு மாதத்தில் முதலமைச்சரே எட்டாயிரம் ரூபாய் கொடுத்துவிட்டார். பொங்கலுக்கு, யாரையும் நான் எதிர்பார்க்கத் தேவையில்லை என்று பேட்டி கொடுத்திருக்கிறார் அந்த சகோதரி. அவர் முகத்தில் பார்க்கின்ற மகிழ்ச்சிதான் எனக்கான உற்சாக மருந்து!


எனக்கு மக்களைப் பற்றிதான் எப்போதும் நினைப்பே தவிர, என்னைப் பற்றி இருந்தது இல்லை. எந்த சூழலிலும், மக்களோடு இருப்பவன் நான். என் சக்தியை மீறியும் உழைப்பவன் நான். இதுமாதிரியான செய்திகளை ஒதுக்கித் தள்ளிவிட்டு, உழைத்துக் கொண்டே இருப்பேன்!


அண்மையில், இதே அரங்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர் மாநாடு என்பது, தமிழ்நாட்டை வளப்படுத்த உலகமே திரண்ட மாநாடு என்று சொன்னால், இன்று நடைபெறுவது உலகத்தை வளப்படுத்த சென்ற தமிழர்களை கொண்டாடும் மாநாடு!


இந்த மாநாட்டுக்கு கிடைத்த மாபெரும் சிறப்புகளில் ஒன்று சிங்கப்பூர் உள்துறை மற்றும் சட்ட அமைச்சர் மாண்புமிகு சண்முகம் அவர்கள் இங்கு வருகை தந்திருப்பது! அவர், உலகப் புகழ்பெற்ற தமிழன் மட்டுமல்ல, உலகமே கவனிக்கின்ற பதவியில் இருக்கும் தமிழன்!


நான் சிங்கப்பூர் சென்றிருந்த போது நான் தங்கிய இடத்திற்கே வந்து, எனக்கு சிறப்பு செய்தார். நேற்று அவரை என்னுடைய வீட்டிற்கே வரவழைத்து மகிழ்ந்தேன். அவரை இன்றும், என்றும் வாழ்த்தி வரவேற்கிறேன். அவரை போலவே, இந்த மேடையில், உலகமெங்கும் பல நாடுகளில் இருக்கக்கூடிய பல்வேறு பொறுப்புகளில், அறிவால், ஆற்றலால் தமிழர்கள் தலைநிமிர்ந்து நிற்கிறார்கள் என்பதற்கு சாட்சியாக அமர்ந்திருக்கும் அனைவரையும் நான் உள்ளபடியே வரவேற்கிறேன். வாழ்த்துகிறேன்.


அனைவரது வருகைக்கும் முதலில் என்னுடைய நன்றியை தெரிவிக்கிறேன். மேடையிலும், நேரிலும் அமர்ந்திருக்கும், உங்களை எல்லாம் பார்க்கும்போது எனக்குப் பெருமையாக இருக்கிறது. "முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்" என்ற உழைப்புத் திறன்தான் கடல் கடந்தும் தமிழர்கள் வெற்றிகரமாக வாழக் காரணம்! இப்படி புலம்பெயர்ந்த நம் தமிழ்ச் சொந்தங்கள், அந்த நாடுகளுடைய முதுகெலும்பாக இருந்து வருகிறார்கள். வளர்ச்சிக்கும், உயர்வுக்கும்


தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களால் 2010-ஆம் ஆண்டு வெளிநாடுவாழ் தமிழர்களுடைய துயரங்கள் களைய “வெளிநாடுவாழ் தமிழர் நலப்பிரிவு" உருவாக்கி அரசாணை வெளியிடப்பட்டதோடு, வாரியம் அமைக்கவும் சட்டமுன்வடிவு உருவாக்கப்பட்டது. ஆனால், தொடர்ந்து வந்த ஆட்சி மாற்றம் காரணமாக, இந்த முயற்சிகளில் தடை ஏற்பட்டது. ஆனால், இப்போது அமைந்திருக்கின்ற நம்முடைய திராவிட மாடல் அரசு தேர்தல் அறிக்கையில் சொன்னபடியே, அயலகத் தமிழர் நலனுக்கென்று தனியாக ஒரு துறையை உருவாக்கி, தனி அமைச்சரையும் நியமித்து, உங்களுடைய அவசரத் தேவைகள் உடனுக்குடன் சிறப்பான முறையில் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது." என பேசினார்.