காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே நத்தாநல்லூர் பகுதியில் செயல்பட்டு வரும் அலங்காரப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தொழிற்சாலையில் பற்றி எரியும் தீயை அணைக்க தீயணைப்புத் துறையினர் பல மணி நேரமாக போராடி வருகின்றனர். தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதம்.
திடீர் தீ விபத்து
காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் தடுத்த நத்தாநல்லூர் பகுதியில் டி கோட்டி ட்ரெண்ட் எனும் அலங்கார பொருட்கள் உற்பத்தி செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. தொழிற்சாலையில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 150 தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவது வழக்கம். இந்நிலையில் இன்று மாலை பணி முடிந்து தொழிலாளர்கள் அனைவரும் சென்று விட்ட நிலையில் இரவு 10 மணி அளவில் மின் கசிவு காரணமாக தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.
மள மள தீப்பற்றி எரிந்ததால்
தீ விபத்து குறித்து பணியில் இருந்த காவலாளி தீயணைப்பு துறைக்கும் காவல்துறைக்கும் தகவல் தெரிவித்தார். தீ விபத்து குறித்த தகவலின் பெயரில் காஞ்சிபுரம் ஒரகடம் ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் தொழிற்சாலைக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அதற்குள் தொழிற்சாலை முழுவதிலும் இருந்த பொருட்கள் அனைத்தும் மள மள தீப்பற்றி எரிந்ததால் தீயை அணைக்க பல மணி நேரமாக தீயணைப்பு துறை வீரர்கள் போராடி வருகின்றனர்.
தீயை அணைப்பதில் சிக்கல்
தீ விபத்து சம்பவம் குறித்து வாலாஜாபாத் போலீஸ் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தீ விபத்தில் தொழிற்சாலையில் இருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்கள் முழுவதுமாக தீயில் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து தீயணைப்பு துறை அதிகாரிகளிடம் தொடர்பு கொண்டு விசாரித்த பொழுது: " தொடர்ந்து 8 மணி நேரத்திற்கு மேலாக தீயை அணைக்கும் பணிகள் ஈடுபட்டு வருகிறோம்.
பிளாஸ்டிக் கழிவுகள் மட்டும் பிளாஸ்டிக் மூலப் பொருட்கள் இந்த தீ விபத்தில் எரிந்து வருவதால் தீயை அணைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. தற்பொழுது வரை தீ என்பது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால் முழுமையான தீயை அணைப்பதற்கு இன்னும் சில மணி நேரம் எடுத்துக் கொள்ளும் என தெரிவித்தனர். தீ மேலும் பரவாத வகையில் அனைத்துவித நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதால் தீ கட்டுப்பாட்டிலே உள்ளது என கூறினார்