மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.1,000 கோடி மதிப்பில் நிவாரண தொகுப்புக்கான அறிவிப்பை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.


இதுகுறித்து தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிட்ட அறிக்கையில், “டிசம்பர் 17 மற்றும் 18, 2023 ஆகிய நாட்களில் தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பெய்த கனமழையின் காரணமாக பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்கள் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டன. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலமைச்சர் கடந்த 21.12.2023 அன்று ஆய்வுகள் மேற்கொண்டு பொதுமக்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். 


அதேபோல் 10-க்கும் மேற்பட்ட மூத்த இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள் மேற்குறிப்பிட்ட மாவட்டங்களுக்கு வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்திட அனுப்பிவைக்கப்பட்டனர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, மேற்கொள்ளப்பட்ட மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகள், குறிப்பாக குடிநீர் மற்றும் மின்சார வசதி வெகுவிரைவில் சரிசெய்யப்பட்டன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சாலைகள் தற்காலிக அடிப்படையில் சரிசெய்யப்பட்டு பொதுமக்கள் போக்குவரத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து வரவழைக்கப்பட்ட தூய்மைப் பணியாளர்கள் மற்றும் மின் துறை, நகராட்சித் துறைப் பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றி பாதிக்கப்பட்டப் பகுதிகளில் இயல்பு நிலைக்குக் கொண்டுவர தீவிரமாகக் களப் பணியாற்றினார்கள்.


இந்தச் சூழ்நிலையில், கடந்த 21.12.2023-ஆம் தேதி அன்று தூத்துக்குடி, மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் பயணம் மேற்கொண்ட மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவிகள் வழகுவது குறித்து முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டிருந்தார்கள். அதற்கான அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.


வரலாறு காணாத வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரண உதவிகளுக்குக் கூடுதலாக, அவர்களுடைய பல்வேறு தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் இன்று தலைமைச்செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பல்வேறு பிரிவினருக்குத் தேவையான உதவிகள் பட்டியலிடப்பட்டு அதற்கான தீர்வுகள் காணப்பட்டன. அதன் விவரம் பின்வருமாறு;


1. சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகள் மற்றும் பழுதுபார்த்தல் - ரூ.385 கோடி


(அ) திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் மழை வெள்ளத்தால் பகுதியாக சேதமடைந்த வீடுகளை பழுது பார்ப்பதும், முழுமையாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டித்தருவதும் அரசின் தலையாய கம என்பதை கருத்திற்கொண்டு வீடுகள் பழுது பார்ப்பதற்கும், முழுமையாக கட்டித்தருவதற்கும் அரசு முடிவெடுத்துள்ளது.


(ஆ) ஊரக வளர்ச்சித் துறை மூலம் முழுவதுமாக சேதமடைந்த வீடுகளை மீண்டும் புதிதாகக் கட்டுவதற்கு ரூ.4 இலட்சம் வழங்கிடவும், பகுதி சேதமடைந்த வீடுகளுக்கு தலா ரூ. 2 இலட்சம் வரை வழங்குவது எனவும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். இத்திட்டம் திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும் செயல்படுத்தப்படும். இத்திட்டத்தின் மூலம் மொத்தம் 385 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 4577 புதிய வீடுகள் கட்டப்படும் மற்றும் 9975 வீடுகளுக்கு பழுது நீக்கம் பணிகள் மேற்கொள்ளப்படும். இத்திட்டம் முழுவதும் மாநில நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும். வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும். அரசு இத்திட்டத்திற்கான


2. பயிர்ச்சேத நிவாரணம் ரூ.250 கோடி


தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட புயல் மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 8 மாவட்டங்களில் சுமார் 2,64,000 ஹெக்டேர் பரப்பளவில் பயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. இதற்கென இழப்பீட்டு நிவாரணம் மொத்தம் 250 கோடி ரூபாய் வழங்கப்படும். பயிர் சேதம் நேரிட்ட விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பயிர்க் கடனும் வேளாண் இயந்திரங்கள் வாங்குவதற்கும் கடன் வழங்கப்படும்.


தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தினால் இம்மாவட்டங்களில் விவசாய நிலங்களில் வெள்ளத்தால் அடித்துவரப்பட்ட மண் படிந்துள்ளது. இதனை அகற்றி மீண்டும் விவசாயத்திற்கு ஏற்றவகையில் சீர்செய்துதரும் பணி மாநில வேளாண்மைப் பொறியியல் துறையின் மூலமாக கட்டணமின்றி மேற்கொள்ளப்படும், இதற்கென வெளி மாவட்டங்களிலிருந்து தேவையான கருவிகள் மற்றும் உபகரணங்கள் வரவழைக்கப்படும்.


3. சிறு வணிகர்களுக்கு ரூ.1 லட்சம் வரை சிறப்பு கடன் திட்டம்


இந்த பெருமழையின் காரணமாக சென்னை, தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் சிறு வணிகர்கள் பெரிய பாதிப்பைச் சந்தித்துள்ளனர். அரசு அவர்களுக்கு உதவிக்கரம் நீட்டவேண்டிய அவசரத் தேவையைக் கருத்தில் கொண்டும், உள்ளூர் பொருளாதாரத்தில் அவர்களது பங்களிப்பை அறிந்தும் அதன் அடிப்படையில் சிறு வணிகர்கள், சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளின் கடன் தேவைகளை நிவர்த்திச் செய்ய இந்த கடன் வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் மூலம் சிறு வணிகர்கள் மற்றும் சிறு கடை உரிமையாளர்கள் மற்றும் தெருவோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வரை 4 சதவீத வட்டி, ரூ.1 இலட்சம் வரை 6 சதவீத வட்டி வீதத்தில் கடன் வழங்கப்படும். இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரையில் வெளியிடப்படும்.


4. குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான ரூ.3 லட்சம் வரை வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம்.


சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருநெல்வேலி, மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் நிறுவனங்கள், தங்கள் வணிகத்தை மீண்டும் புதுப்பிக்கத் தேவையான மூலதனச் செலவு மற்றும் நடைமுறை மூலதனம் போன்ற அத்தியாவசிய செலவுகளுக்கு நிதியுதவி அளித்திட, தமிழ்நாடு தொழில் முதலீட்டுக்கழகத்தின் (TIIC) மூலம் "குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வெள்ள நிவாரணக் கடனுதவித் திட்டம்” என்ற சிறப்புத் திட்டம் தொடங்கப்படும். இந்தத் திட்டத்தின்கீழ், மேற்கூறிய மாவட்டங்களில் வெள்ளம் பாதித்தப் பகுதிகளில் அமைந்துள்ள குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு மொத்தம் ரூ.100 கோடி” என தெரிவிக்கப்பட்டுள்ளது.