தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு இன்று மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களில் ஆய்வு பயணம் மேற்கொண்டுள்ளார். இதையொட்டி இன்று அதிகாலை மயிலாடுதுறைக்கு வந்தடைந்த அறநிலையத்துறை அமைச்சர் அங்கிருந்து கார் மூலம் புறப்பட்டு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோயிலில் சிறப்பு வழிபாடு மேற்கொண்டார். அதனைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு மயிலாடுதுறையை அடுத்து உள்ள தருமபுரம் ஆதீன மடத்தை வந்தடைந்தார். ஆதீனத்தின் முன்பு அமைச்சர் சேகர்பாபுவுக்கு பூரண கும்ப மரியாதையுடன் சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து அமைச்சர் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.



சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம் : தீட்சிதர்களுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை செயல்படாது- அமைச்சர் சேகர் பாபு..


இதைதொடர்ந்து ஆதீன திருமடத்தில் தருமபுரம் ஆதீனத்தின் அறநிலை துறை அமைச்சர் சந்தித்தார். தொடர்ந்து, தருமபுரம் ஆதீனத்தில் 25 அறைகளுடன் கட்டப்படுள்ள ஸ்ரீ குருஞானசம்பந்தர் அருள் நிலைய விருந்தினர் மாளிகையை அறநிலையத்துறை அமைச்சர் திறந்து வைத்து ஆதீன வளாகத்தில் 27 ஆயிரம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் அங்குள்ள தேவார திருமுறை பாடசாலையை பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாடினார். ஆதீனம் சார்பில் அமைச்சருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. 




அதனைத் தொடர்ந்து,  செய்தியாளர்களை ஆதீன மடாதிபதி மற்றும் அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் கூட்டாக சந்தித்தனர். அப்போது அமைச்சர் சேகர்பாபு செய்தியாளர்களிடம் கூறுகையில், ”சைவத்துடன், தமிழை வளர்க்கும் பணியில் தொன்மையான ஆதினங்கள் ஈடுபட்டுள்ளன, ஆதீனங்களுக்கு உண்டான சிறப்பை தமிழக அரசு வழங்கும், அவற்றின் பாரம்பரியங்களில் தமிழக அரசும் இந்து அறநிலையத் துறையும், தலையிடாது” என்று கூறினார். 




மேலும் சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, ”உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிதம்பரம் நடராஜர் கோயிலில், கனகசபையில் பக்தர்கள் தரிசனம் செய்வது குறித்து தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், மற்றபடி சிதம்பரம் நடராஜர் ஆலயத்தை இந்து அறநிலைத்துறை தனது கட்டுப்பாட்டில் எடுத்துக் கொள்ளும் திட்டம் எதுவும் இல்லை. நடராஜர் கோயில் விவகாரத்தில் கோயில் நிர்வாகத்திற்கும் தீட்சிதர்களுக்கு எதிராக இந்து சமய அறநிலையத்துறை செயல்படாது எனவும், தீட்சிதர்களுக்கு இடையே உள்ள பிரச்சனைகள், பக்தர்கள் தரிசனம் செய்வது தொடர்பான பிரச்சனைகள் என ஏராளமான புகார்கள்  வந்துள்ளது. அந்த புகார்கள் குறித்து ஆய்வு செய்ய வேண்டும் என்று கடிதம் அனுப்பியுள்ளோம், திருக்கோயிலை இந்து சமய அறநிலையத்துறை ஏற்கும் என நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை. சிதம்பரம் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கவில்லை. புகார் குறித்து அங்கு ஆய்வு செய்வது என்பது தீட்சதர்களுக்கு எதிரான நடவடிக்கையோ கோயில் நிர்வாகத்திற்கு எதிரான நடவடிக்கையோ இல்லை” என்றார்.





”இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அங்கு கணக்கு வழக்கு பார்ப்பது வழக்கமான ஒரு நடைமுறைதான் என்றும், சிதம்பரம் ஆலயத்தில் பக்தர்கள் தெரிவித்த புகாரின்படி விருப்பு வெறுப்பு இன்றி விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தீட்சிதர்கள் பிரதமரை சந்திப்பதாக கூறுவது ஜனநாயக உரிமை அதற்கு நாங்கள் எந்தவித தடையாக இருக்க மாட்டோம்” என்றார்.  இந்த பயணத்தின்போது அமைச்சருடன்  அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் கண்ணன், சட்டமன்ற உறுப்பினர்கள் நிவேதா முருகன் பன்னீர்செல்வம் ராஜ்குமார் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.