சிதம்பரம் ஞானப்பிரகாச குளத்தில், 30 ஆண்டுகளுக்கு பிறகு, நடராஜர் கோவில் தரிசன விழா தெப்போற்சவம் நடைபெற உள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவில் - Chidambaram Nataraja Temple
கடலுார் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோவிலில், ஆருத்ரா தரிசனம் மற்றும் ஆனி திருமஞ்சனம் என ஆண்டுக்கு இருமுறை தரிசன விழா விமர்சையாக நடக்கிறது. தரிசன நிறைவு நாளன்று, கனகசபை நகரில் உள்ள ஞானப்பிரகாச குளத்தில் தெற்போற்சவம் நடைபெறும். ஆனால், குளம் துார்வாரப்படாமல் கழிவுநீர் தேங்கியது உள்ளிட்ட காரணங்களால், கடந்த 30 ஆண்டுகளாக அங்கு தெப்போற்சவம் நடத்தப்படவில்லை.
இந்நிலையில், வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம், நகராட்சி சேர்மன் செந்தில்குமார் கோரிக்கையின் பேரில், நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் நேரு, சிதம்பரத்தில் உள்ள குளங்களை சீரமைக்க ரூ. 15 கோடி நிதி ஒதுக்கினார்.
30 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் நடராஜர் கோவிலில் தெப்போற்சவம்
அந்த நிதியில், ரூ. 3 கோடி செலவில் ஞானப்பிரகாச குளத்தை துார்வாரி கரைகள் பலப்படுத்தப்பட்டு, சுற்றிலும் மின்விளக்குகளுடன் கூடிய நடைபாதை அமைக்கப்பட்டது. குளத்தின் நடுவில், இடிந்த நிலையில் இருந்த நீராழி மண்டபம், நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் சார்பில் புதிதாக கட்டப்பட்டது. இந்நிலையில், சமீபத்தில் பெய்த மழையால் குளம் நிரம்பி, ரம்மியமாக காட்சியளிக்கிறது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழியில் ஆருத்ரா, ஆனியில் ஆனி திருமஞ்சனம் என, ஆண்டுக்கு இரு முறை தரிசன விழா நடைபெறும். இந்த ஆண்டு ஆருத்ரா தரிசன விழா, இன்று 4ம் தேதி காலை 6:15 மணி முதல் 7:00 மணிக்குள் கொடியேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒவ்வொரு நாளும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடக்கிறது. 11ம் தேதி தங்க ரதத்தில் பிஷாடன மூர்த்தி வீதியுலா நடக்கிறது. 12ம் தேதி தேரோட்டம் நடக்கிறது.
அன்றைய தினம் காலை 5:00 மணிக்கு நடராஜர், அம்பாள், விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர் தனித்தனி தேரில் எழுந்தருளி வீதியுலா வருவர். 13ம் தேதி அதிகாலை 2:00 மணி முதல் 6:00 வரை, ஆயிரங்கால் மண்டப முகப்பில் சிவகாம சுந்தரி சமேத நடராஜருக்கு மகாபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து திருவாபரண அலங்காரம், பஞ்ச மூர்த்தி வீதி உலா காட்சியும், சித்சபையில் விஷேக ரகசிய பூஜையும் நடைபெறும். மாலை 3:00 மணிக்கு மேல், நடராஜரும், அம்பாளும் ஆயிரங்கால் மண்டபத்தில் இருந்து நடனமாடியபடி பக்தர்களுக்கு காட்சி கொடுக்கும் தரிசன விழா நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் பொது தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு மார்கழி ஆருத்ர தரிசன நிறைவு நாளான 15ம் தேதி, 30 ஆண்டுகளுக்கு பிறகு, ஞானப்பிரகாசம் குளத்தில் தெப்போற்சவம் நடைபெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர்.