சிதம்பரம் நடராஜர் கோவில் தீட்ஷிதர்கள், கனகசபையில் பக்தர்கள் ஏறி வழிபடக்கூடாது என அறிவிப்பு பலகை வைத்தனர். இந்த அறிவிப்பு பலகைக்கு பக்தர்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பவே, அங்கு அறநிலையத்துறை அதிகாரிகள் சென்று அறிவிப்பு பலகையை அகற்ற முயன்றனர். ஆனால் அப்போது தீட்ஷிதர்கள் அதிகாரிகளை மிரட்டும் தொனியில் பேசியதால், அறநிலையத்துறை அதிகாரிகள் வழக்கு தொடர்ந்தனர்.  இந்நிலையில், இன்று அதாவது, ஜூன் 26ஆம் தேதி இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நூற்றுக்கணக்கான காவலர்களுடன் சென்று தீட்ஷிதர்கள் வைத்த அறிவிப்பு பலகையை அகற்றினர்.

  


சிதம்பரம் நடராஜர் கோவிலின் தீட்ஷிதர்கள் வைத்த அறிவிப்பு பலகையில்,  ”ஜூன் 24ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கனகசபை தரிசனத்துக்கு அனுமதி இல்லை” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனை பக்தர்கள் எதிர்க்கவே, உடனே அந்த பலகையை அகற்ற அறநிலையத்துறை செயலர் உட்பட அதிகாரிகள் வந்தனர். ஆனால் பலகையை அகற்றவிடாமல், தீட்சிதர்கள் தடுத்தனர். இதுகுறித்து அறநிலையத்துறை அமைச்சரும் தீட்சிதர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். இதையடுத்து, இந்து சமய அறநிலையத்துறை செயலர் சரண்யா துணை கண்காணிப்பாளரிடம் நேற்று அதாவது ஜூன் 25ஆம் தேதி புகார் அளித்தார். அந்த புகாரில், பலகையை அகற்ற சென்றபோது, தடுத்ததாகவும், மிரட்டும் வகையில் பேசியதாகவும் குறிப்பிட்டிருந்தார். 


இந்நிலையில், இன்று நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்களுடன் சென்ற அறநிலையத்துறை அதிகாரிகளிடம் தீட்ஷிதர்கள் வாக்குவாதம் செய்தனர். அதன் பின்னர்  காவல்துறையினர் முன்னிலையில் அறநிலைத்துறை அதிகாரிகள் அந்த அறிவிப்பு பலகையை அகற்றினர். 


இந்த விவகாரம் தொடர்பாக நேற்று மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, கூறியதாவது, ”மத அடையாளங்களுடன் கோவிலுக்குள் வரும்போது தான் பிரச்னை வருகிறது. அரசைப் பொறுத்தவரையில் எம்மதமும் சம்மதம், அனைவரும் சகோதரர்களாக வாழவேண்டும் என்பது தான் கொள்கை எனவும் அவர் கூறியுள்ளார். ஆனால், எவையெல்லாம் தேவையற்றவையோ அவற்றையெல்லாம் தீட்சிதர்கள் செய்து வருகின்றனர். இந்துக்களின் வழிபாட்டு முறையை ஏற்றுக்கொண்ட எந்த மதத்தினரும் கோயிலுக்குள் சென்று வழிபடலாம்” என கூறியிருந்தார்.


கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக புகழ்பெற்ற  நடராஜர் கோவில் உள்ளது. பஞ்ச பூத தலங்களில் ஆகாய தலமாக விளங்கும் இந்த கோவிலில் ஆண்டுதோறும் 6 மகா அபிஷேகம் நடைபெறுவது வழக்கம். இதில் மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசன விழாவும், ஆனி மாதத்தில் நடைபெறும் ஆனி திருமஞ்சன திருவிழாவும் சிறப்பு வாய்ந்தவையாகும். ஏனெனில், இந்த 2 உற்சவத்தின் போதும் மூலவராகிய ஆனந்த நடராஜமூர்த்தி, சிவகாம சுந்தரி அம்மனுடன் உற்சவராக தேரில் எழுந்தருளி வலம் வருவார் என்பது குறிப்பிடத்தக்கது.