செஸ் போட்டிகளிலேயே மிகவும் கவுரவமிக்க தொடராக கருதப்படுவது செஸ் ஒலிம்பியாட் ஆகும். நீண்ட பாரம்பரியமிக்க இந்த தொடரின் 44வது செஸ் ஒலிம்பியாட் இன்று சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்க உள்ளது. இந்த தொடரில் இதுவரை நடைபெற்ற எந்த செஸ் ஒலிம்பியாட் போட்டியிலும் இல்லாத அளவிற்கு 187 நாடுகளின் வீரர்கள் பங்கேற்க உள்ளனர். சுருக்கமாக சொன்னால் உலகின் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட நாடுகளின் வீரர்கள் பங்கேற்கின்றனர்.


செஸ் வீரர்களின் ஒலிம்பிக் என்று அழைக்கப்படும் இந்த செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடரை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். வரலாற்றுச்சிறப்புமிக்க செஸ் ஒலிம்பியாட்டின் தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று தொடங்க உள்ளது. இந்த போட்டியைத் தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலமாக இன்று மாலை 4.45 மணிக்கு சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக 5.25 மணிக்கு புறப்பட்டு ஐ.என்.எஸ். அடையாருக்கு 5.45 மணிக்கு வருகிறார். பின்னர், அங்கிருந்து 5.50 மணிக்கு சாலை மார்க்கமாக புறப்பட்டு நேரு உள்விளையாட்டு அரங்கத்திற்கு மாலை 6 மணிக்கு வருகிறார்.




அங்கு செஸ் ஒலிம்பியாட் போட்டியைத் தொடங்கி வைக்கும் பிரதமர் மோடி இரவு 7.30 மணி வரை விழாவில் பங்கேற்கிறார். விழா நிறைவடைந்த பிறகு, அங்கிருந்து புறப்பட்டு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு சாலை மார்க்கமாக செல்கிறார். இன்று இரவு ஆளுநர் மாளிகையிலே பிரதமர் மோடி பங்கேற்கிறார். பின்னர், நாளை காலை அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெறும் 42வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி மதியம் 11.50 மணியளவில் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்கிறார்.


பிரதமர் மோடி பங்கேற்கும் விழா மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் அனுராக்தாக்கூர், எல்.முருகன் ஆகியோர் பங்கேற்கின்றனர். பிரதமர் மோடி வருகையை முன்னிட்டும், முதல்வர், மத்திய அமைச்சர்கள், உலகின் 187 நாட்டின் வீரர்கள் பங்கேற்பதாலும் சென்னை முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். பிரதமர் மோடி வரும் வழியெங்கிலும் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.




விழாவில், தமிழ்நாட்டின் பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக செஸ் காய்கள் ஆட்டம், பொய்க்கால் குதிரை ஆட்டம், பறையாட்டம், பரதம் ஆகிய நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவின் சார்பில் மட்டும் 6 அணிகளின் சார்பில் 30 வீரர்கள் களமிறங்குகின்றனர்.  செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடருக்கான ஜோதி ஓட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண