செஸ் ஒலிம்பியாட் விளம்பர பதாகைகளில் பிரதமர் மோடியின் போட்டோக்களை பாஜகவினர் ஒட்டிய நிலையில், பெரியாரிஸ்ட்டுகள் அதை மை பூசி அழித்த சம்பவம், ஒரே நாளில் நடந்துள்ளது. 


தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில், சென்னையில் நாளை தொடங்கவுள்ள உலக செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்க விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு போட்டியினை தொடங்கி வைக்கவுள்ளார். இந்த தொடக்க விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை நடைபெறவிருக்கிறது. 


இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான விளம்பர பதாகைகள் சென்னை முழுவதும், தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்டு இருக்கிறது. இதில், பிரதமர் மோடியின் படம் இடம் பெறவில்லை என பாஜகவினர் தொடக்கம் முதலே குற்றம் சாட்டி வந்தனர்.  இன்று பிரதமர் மோடியின் போட்டோவை , ஏற்கனவே தமிழக அரசு செய்துள்ள விளம்பர பதாகைகளில் பாஜகவினர் ஒட்டி வந்தனர். இந்த வீடியோ இணையத்தில் இன்று வைரலாக பரவியவாறு இருந்தது. 






பிரதமர் மோடி தமிழம் வரும்போது எல்லாம், குறிப்பிட்ட சில கட்சியினை சேர்ந்தவர்கள், அமைப்புகளை சேர்ந்தவர்கள் சமூக வலைதளத்தில் GoBackModi என்ற ஹேஷ் டேக்கினை டிரெண்ட் செய்து எதிர்ப்பினை வெளிப்படுத்தி வருவார்கள். இந்த நிலையில், நாளை பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வரவுள்ள நிலையில், தந்தை பெரியார் திராவிட கழகத்தினைச் சேர்ந்தவர்கள், பாஜகவினரால் ஒட்டப்பட்ட பிரதமர் படத்தினை மை பூசி அழித்துள்ளனர். இந்த சம்பவம், தலைநகர் சென்னையில் அரசியல் சூட்டினை கிளப்பியுள்ளது. இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில், பிரதமர் மோடியின் படங்களை மையிட்டு அழித்தவர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.  நாளை பிரதமர் வரவுள்ள நிலையில் இந்த சம்பவங்களால் அரசியல் களம் விறுவிறுப்பாகியுள்ளது. 






பிரதமர் படம் ஏன் இடம் பெறவில்லை என்ற பாஜவினரின் கேள்விக்கு பதில் அளித்துள்ள திமுகவைச் சேர்ந்த ராஜீவ் காந்தி கூறியது, உலக செஸ் அமைப்பு இந்தியாவில் போட்டியினை நடத்த திட்டமிட்ட போது, எந்த மாநிலமும் முன் வரவில்லை. ஆனால் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், முன் சென்று போட்டியினை நடத்துவதாக கூறி அங்கீகாரத்தினை பெற்று வந்தார். மேலும்  100 கோடி ரூபாய் மாநில நிதியில் இருந்து ஒதுக்கியுள்ளார். அதனால்தான் பிரதமர் படம் இல்லை என கூறியுள்ளார்.