சென்னை தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் புகழும் பெருமாள், தலைமை காவலர் தீபக், காவலர் பவுன்ராஜ் ஆகியோர் புரசைவாக்கம் கெல்லீஸ் சாலையில் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அவ்வழியே வந்த ஆட்டோவை நிறுத்தி, அதில் இருந்த 2 வாலிபர்களிடம் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். இதனால், ஆட்டோவை பரிசோதனை செய்தபோது, பட்டாக்கத்தி மற்றும் 10 கிராம் கஞ்சா இருந்தது.
இதனால், அவர்களை பிடித்து அருகே உள்ள அயனாவரம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினர். அதில், திருவல்லிக்கேணி பழனியம்மன் கோயில் 3வது தெருவை சேர்ந்த சுரேஷ் (28), பட்டினப் பாக்கம் சீனிவாசபுரம் 2வது தெருவை சேர்ந்த விக்னேஷ் (25) என தெரியவந்தது. பெயின்டரான சுரேஷ் மீது, 2 கொலை வழக்கு, 2 கொள்ளை வழக்குகள் உட்பட6 வழக்குகள் ராஜமங்கலம், கண்ணகிநகர், மெரினா, துரைப்பாக்கம் காவல் நிலையங்களில் நிலுவையில் இருப்பது தெரியவந்தது. விக்னேஷ் மெரினா கடற்கரையில் குதிரையோட்டியாக வேலை செய்து வந்துள்ளார். இவர் மீது மெரினா பட்டினப்பாக்கம் காவல் நிலையத்தில் 2 திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது.
நள்ளிரவில் ஆட்டோவில் பட்டாக்கத்தியுடன் எங்கு செல்கிறீர்கள் என்று தலைமை காவலர் குமார், காவலர் பவுன் ராஜ், ஆயுதப் படை காவலர் கார்த்திக் ஆகி யோர் விசாரித்துள்ளார். இருவரும் கஞ்சா போதையில் இருந்ததால் சரியாக பதில் அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் போலீசார் போதை தெளிந்த பிறகு விசாரணை நடத்தலாம் என்று முடிவு செய்துள்ளனர்.
பிறகு நேற்று அதிகாலை வரை இருவருக்கும் போதை சரியாக தெளியாததால், அவர்களை அயனாவரம் காவல் நிலையத்தில் இருந்து தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து வழக்கு பதிவு செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். கஞ்சா போதை என்பதால் குதிரையோட்டி விக்னேஷ் உடல் ரீதியாக கடுமையாக பலவீனமாக இருந்துள்ளார்.
இதனால் போலீசார் 2 பேருக்கும் காலை சிற்றுண்டி வாங்கி கொடுத்துள்ளனர். இருவரும் அதை வாங்கி சாப்பிட்டு கொண்டிருந்தனர். திடீரென விக்னேஷிற்கு வாந்தி வந்தது. இதை பார்த்த காவலர்கள் தண்ணீர் எடுத்து வந்தனர். அப்போது விக்னேஷிக்கு வலிப்பு ஏற்பட்டது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த காவலர்கள் உடனே கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லும் போதே விக்னேஷின் நாடி துடிப்பு குறைந்தும், வலிப்பு தொடர்ந்து ஏற்பட்டு இருந்தது.
பிறகு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட விக்னேஷை ஆய்வு செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அதைதொடர்ந்து விக்னேஷ் இறந்தது குறித்து தலைமை செயலக குடியிருப்பு போலீசார், உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர். அதன்படி உயர் போலீஸ் அதிகாரிகள் தலைமை செயலக குடியிருப்பு காவல் நிலையத்திற்கு சென்று விசாரணை நடத்திய 3 போலீசாரிடம் நடந்த சம்பவம் குறித்து கேட்டறிந்தனர்.
மேலும் இதுதொடர்பாக அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அப்போது விக்னேஷிக்கு அடிக்கடி வலிப்பு ஏற்பட்டு வந்ததும் தெரியவந்தது. இது குறித்து அவர் முறையாக மருத்துவ சிகிச்சை பெறாமல் இருந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
விசாரணைக்கு அழைத்து வரப்பட்ட குதிரையோட்டி திடீரென வலிப்பு ஏற்பட்டு இறந்ததால், மாஜிஸ்திரேட் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக விக்னேஷ் உறவினர்களிடமும் போலீசார் தகவல் தெரிவித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்