தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்தில் திருவள்ளூர், நாகை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வெப்பசலனம் காரணமாக நேற்று மாலை முதல் சென்னையில் அவ்வப்போது பலத்த காற்றுடன் ஓரிரு இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. நேற்று தமிழ்நாட்டில் சென்னையில் அதிகபட்சமாக 42 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவானது. காலை நேரங்களில் வெயில் சுட்டெரிக்க, மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. ஆயிரம் விளக்கு, தேனாம்பேட்டை, நந்தனம், சைதாப்பேட்டை, கிண்டி, மடிப்பாக்கம், ஆலந்துர், மீனம்பாக்கம், மேடவாக்கம், அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், எம்.ஆர்.சி நகர், காமராஜர் சாலை, ராஜாஜி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நல்ல மழை பதிவானது. இதனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வழக்கமாக மே மாதம் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு மேற்கு திசை காற்றின் மாறுபாட்டின் காரணமாக பல மாவட்டங்களில் மழை பதிவானது. குறிப்பாக நீலகிரி, கோவை, திண்டுக்கல், மதுரை உள்ளிட்ட இடங்களில் மழை பதிவானது. மே மாதம் முடிந்து வெயில் சற்று தணியும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஜூன் மாதம் தொடங்கியது முதலே வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத வகையில் ஜூன் மாதத்தில் இரண்டாவது முறையாக 42 டிகிரி செல்சியஸ் கடந்து வெப்பநிலை பதிவானது. இதன் காரணமாக மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். ஆனால் கடந்த இரண்டு நாளாக மழை பெய்து வருகிறது. மேலும் இன்று காலை முதலே வானம் மேக மூட்டத்துடன் காணப்படுகிறது.
அதிகபட்ச வெப்பநிலை :
06.06.2023 மற்றும் 07.06.2023: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில இடங்களில் இயல்பிலிருந்து 2 – 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும்.
அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress ) காரணமாக அசௌகரியம் ஏற்படலாம்.
வெப்பஅலை எச்சரிக்கை: தமிழக உட்பகுதிகளில் ஓரிரு இடங்களில் வெப்ப அலை நிலவக்கூடும்.