வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழ்நாட்டின் 7 மாவட்டங்களில் இன்று முதல் அடுத்த 4 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


 






இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,


கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலூர், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், சேலம், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. புதுச்சேரியில் இடியுடன் கூடிய மிதமான மழையும், காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. வரும் 25 மற்றும் 26 ஆகிய தேதிகளில் நீலகிரி, கோவை, கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48  மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை கலவையில் 8, மாரண்டஹள்ளி, ராஜபாளையத்தில் தலா 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 33 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஒட்டியிருக்கும். ஆகஸ்ட் 27ஆம் தேதி வரை அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளதால், அங்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.