சொந்த ஊர்களுக்கு படையெடுக்கும் மக்கள்:


தொடர் விடுமுறையை அடுத்து பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்காக, சென்னையில் உள்ள பலரும் சொந்த ஊர்களுக்கு படையெடுத்துள்ளனர். நேற்று ஒரு நாளிலேயே சென்னையில் இருந்து ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர், அரசுப் பேருந்துகளில் முன்பதிவு செய்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு பயணம் செய்துள்ளனர். இந்நிலையில், வெள்ளிக்கிழமையான இன்று பணியை முடித்துக்கொண்டு சொந்த ஊர்களுக்கு செல்ல பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.


கடும் போக்குவரத்து நெரிசல்:


இதன் காரணமாக, அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து கார், பைக் என தங்களது சொந்த வாகனங்களிலும், பேருந்துகளிலும் பயணம் மேற்கொண்டுள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கூட்ட நெரிசலை தவிர்க்கும் நோக்கில் 6 இடங்களில் பேருந்து வசதிகள் செய்யப்பட்டுள்ளது. இருந்தாலும் அதிகப்படியான மக்கள் ஒரே நேரத்தில் சென்னையில் இருந்து வெளியேறுவதால், சென்னை புறநகர் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நிறைந்து காணப்படுகிறது.


குறிப்பாக பெருங்களத்தூர் மற்றும் மதுரவாயல் பகுதிகள் வழியாக, வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன. தென்மாவட்டங்களுக்கான பேருந்துகள் செல்லும், பெருங்களத்தூர் பகுதியில் ஜிஎஸ்டி சாலையில் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு அணிவகுத்து நிற்கும் வாகனங்கள், ஆமை வேகத்தில் ஊர்ந்து செல்கின்றன.


கோயம்பேட்டில் பேருந்து நெரிசல்:


பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கத்தை முன்னிட்டு கோயம்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வரும் 17-ம் தேதி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் மூலம் சிறப்புப் பேருந்துகள் இயக்கபடுகின்றன.  இதன் காரணமாக, கோயம்பேட்டை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள், பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.


சிறப்பு பேருந்துகள்:


சென்னையில் இருந்து தினமும் இயக்கப்படும் 2,100 பேருந்துகளுடன் 3 நாட்களுக்கு கூடுதலாக 4,449 சிறப்பு பேருந்துகளும், மற்ற முக்கிய நகரங்களிலிருந்து 6,183 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன. இதையடுத்து, நாளை வரை  வரை மொத்தமாக 16,932 பேருந்துகள் சிறப்பு பேருந்துகளும், பிற நகரங்களில் இருந்து 1,508 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.


6 முக்கிய இடங்கள்: 


வெளியூர் செல்லும் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு,  போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாகவும் சென்னையில் கோயம்பேடு பேருந்து நிலையம் மட்டுமின்றி, கே.கே.நகர், மாதவரம், தாம்பரம், பூந்தமல்லி ஆகிய இடங்களிலும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வெளியூர்களுக்கு செல்லும் பேருந்துகள் நிற்கும் இடங்களுக்கு செல்வதற்கு ஏதுவாக 24 மணி நேரமும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதேபோன்று, இன்றும், நாளையும்  நள்ளிரவு 12 மணி  வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். நெரிசல் மிகு நேரங்களில்  அதாவது மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 5 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள், இரவு 10 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.